தேவர் தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது வங்கி நிர்வாகம்!

kava
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுடைய தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார்.

அந்த தங்க கவசம் தேவர் ஜெயந்தியின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்பாக மதுரையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் வைக்கப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் 25-ம் தேதி தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் கடந்தாண்டு வரை பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கியிடமிருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவித்து வந்தார்.

இதனிடையே அணி பிரிவின் காரணமாக திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது.

அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தபோதும் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

ஆனால் தங்க கவசத்தை தங்கள் அணிக்கே தரவேண்டும் என டிடிவி அணியும் எடப்பாடி அணியும் போட்டி போட்டனர். இரு தரப்புக்குமே வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதையடுத்து தேவர் குருபூஜைக்கான தங்க கவசம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Response