மெர்சல் படத்திற்கு  எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்!

Madras-High-Court-LL-Size-min

மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு போட்டீர்களே மது அருந்துவது, புகை பிடிப்பதை எதிர்த்து வழக்கு போட்டீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த சரக்கு சேவை வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து இருப்பதாக பா.ஜ.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், மெர்சல் படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், சரக்கு சேவை வரி குறித்து தவறான தகவல் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த படத்துக்கு அவசர கதியில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகளை கொண்ட மெர்சல் படத்தை திரையிட தடை விதிக்கவேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்ம் கோரி இருந்தார்.

இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் கோரிக்கை விடுத்தநிலையில் வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மெர்சல் படத்தில் அப்படி என்ன தான் தவறு இருக்கிறது. மெர்சல் என்பது திரைப்படம் தானே தவிர அது நிஜவாழ்க்கையல்ல.

திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு போட்டீர்களா? மது அருந்துவது, புகை பிடிப்பதை எதிர்த்து வழக்கு போட்டிருக்கலாமே என்றும் கேட்டுள்ளனர். ஒருவேளை அந்தப் படத்தில் வரும் வசனங்கள் பிடிக்கவில்லை என்றால் படத்தை பார்க்காதீர்கள் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Response