வடகிழக்கு பருவமழைக்கால பேரிடர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?: திமுகவினருக்கு ஸ்டாலின் அறிக்கை

11-1462941278-04-1420356333-karunanidhi-stalin4-600
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ‘டிசம்பர் வெள்ளம்’, ‘வர்தா புயல்’ என்று சென்னையை புரட்டிப்போட்ட பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும், உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், மத்திய பாஜ அரசிடம் ‘குதிரை பேர’ அரசு கேட்ட எந்த நிதியையும் இதுவரை பெறவில்லை. சென்னை மாநகராட்சி சென்னை பெருநகர் குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்ற அமைப்புகளுக்கு இடையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் ஏதும் நடைபெறுவதாகவும் தெரியவில்லை. சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு அரசு பணத்தில் அரசியல் விழாக்கள் நடத்திக் கொண்டு ‘டெங்கு மரணங்கள்’ குறித்தோ, ‘பருவ மழையை எதிர்கொள்வது’ பற்றியோ எவ்வித கவலையும் இல்லாமல் முதலவர் எடப்பாடி பழனிசாமி தனக்கு முழு சைஸ் கட்அவுட் வைத்துக் கொள்வதில் மட்டும் ஆர்வமாக இருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. மனித உயிர்களையும், உடமைகளையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம். என்ற அறிவிப்பை துறை அமைச்சர் வெளியிடுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் ஏதும் நடக்கவில்லை. ஒரு சிறிய மழையிலேயே சென்னை வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பார்த்தால், பெருவெள்ளத்தை சந்திப்பதற்கு சென்னை மாநகராட்சியோ, இந்த அரசோ தயாராகவில்லை என்பதை உணர முடிகிறது.

_92931312_whatsappimage2016-12-12at8.46.39am

அதேநேரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக சென்னை பெருவெள்ளத்தின் போதும், வர்தா புயல் நேரத்திலும் ஆற்றிய பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். இப்போதும் கூட மாநிலம் முழுவதிலும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வரும் கழக நிர்வாகிகளை ஊக்குவித்து, அந்தப் பணிகளை நானே நேரில் சென்று தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன். ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ள இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு செய்யத் தவறிய மக்கள் பணிகளை எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக செய்து வருகிறது. ஆகவே வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளாமல் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ அரசு பற்றி கவலைப்படாமல், ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகள் இப்போதே மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகள், திடீர் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், தூர்வாராமல் கிடக்கும் கால்வாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்கள் போன்றவற்றை அடையாளம் காண வேண்டும் எனவும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் சமூக நலக்கூடங்கள், மாநகராட்சிப் பள்ளிகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா, கட்டிடங்களின் உறுதித்தன்மை எப்படியிருக்கிறது போன்றவற்றையும் அறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதவிர, ஆங்காங்கே உள்ள கழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களும் பேரிடர் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response