‘கட்சியில் இணைய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டது!’ – பா.ஜ.க-வில் இணைந்தவர் பகிரங்க குற்றச்சாட்டு

800x480_f72f24a3981b8288bf87defb4a14f5b1

குஜராத் மாநிலத்தில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க ஒரு கட்சியில் இருப்பவர் மற்ற கட்சிக்குத்தாவும் சம்பவம் அதிகரித்துள்ளது. முக்கியமாக, படேல்களுக்காக இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் படேல் கட்சியில் இருந்தவர்கள் சிலர், பா.ஜ.க-வுக்குத்தாவிவருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க-வில் இணைந்த ஹர்திக் படேல் கட்சியைச் சேர்ந்த நரேந்திர படேல், ‘பா.ஜ.க-வில் இணைய எனக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. அதில், தற்போது 10 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று செய்தியாளர்கள் முன்னிலையில் ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது, குஜராத் அரசியல் வட்டாரத்தில்பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வைக்கப்பட்டதை அடுத்து, பா.ஜ.க-வில் இணைந்தவரான நிகில் சவானி, ‘நரேந்திர படேலுக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட செய்தியைப் பற்றி கேள்விப்பட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தமளிக்கிறது.

நரேந்திர படேல் ஒரு சிறிய குடும்பத்திலிருந்துவந்தவர். இருப்பினும் இந்த பேரத்தை அவர் ஏற்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனக்கு, நரேந்திர படேலுக்கு பேசப்பட்டது போல பேரம் எதுவும் பேசப்படவில்லை. நான் பா.ஜ.க-விலிருந்து விலகுகிறேன். அவர்கள், உருப்படியான எதையும் செய்யவில்லை. நிறையப் பேர் பா.ஜ.க பணம் கொடுப்பது பற்றிக் கூறிவருகின்றனர். இதுகுறித்து, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து என் தரப்பு வாதங்களை வைப்பேன்’ என்று கூறினார். இவரும் ஹர்திக் படேல் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Response