ஓராண்டுக்குப்பிறகு உதித்த உதயசூரியன்!

FB_IMG_1508472802338 (1)

திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு நேற்றிரவு 7 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

ஒவ்வாமை காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 2016 டிச.1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 10 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

FB_IMG_1508472826502

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட கருணாநிதி, கடந்த ஓராண்டாக கோபாலபுரம் வீடு, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை தவிர வேறெங்கும் செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 6.45 மணிக்கு திடீரென கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட கருணாநிதி, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருடன் காரில் மகள் செல்வி உடன் வந்தார்.

இரவு 7 மணிக்கு முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

FB_IMG_1508472838893

பின்னர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புடைசூழ முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தை பார்வையிட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காட்சி அரங்கத்தை ஆர்வமுடன் வலம் வந்தார். முரசொலியில் தான் எழுதிய கட்டுரைகள் படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை வியப்புடன் பார்த்த கருணாநிதி, சைகையால் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

முரசொலி ஆசிரியர் அறையில் கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற மெழுகுச் சிலை காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த கருணாநிதி சில நிமிடங்கள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தது உடன் இருந்த ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை கண் கலங்கச் செய்துள்ளது.

காட்சி அரங்கில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள 1991-ல் ராஜீவ் காந்தி கொலையின்போது முரசொலி அலுவலகம் எரிக்கப்பட்ட காட்சி, சட்டப்பேரவை கூண்டில் முரசொலி ஆசிரியர் நிறுத்தப்பட்ட காட்சி ஆகியவற்றை கருணாநிதி பார்த்து வியந்துள்ளார்.

FB_IMG_1508472843820

சுமார் 25 நிமிடங்கள் காட்சி அரங்கை பார்வையிட்ட கருணாநிதி இரவு 7.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். ஓராண்டுக்கு முன்பு தினமும் அவரை சந்தித்துக் கொண்டிருந்த முரசொலி ஊழியர்கள் கண்ணீர் மல்க அவரை வழியனுப்பி வைத்தனர்.

கருணாநிதியுடன் வந்த அவரது மருத்துவர் கோபால் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கருணாநிதியுடன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வேறொரு மருத்துவ அதிசயத்தை காண்பீர்கள்’ எனக் கூறினார்.

கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்த தகவல் வெளியானதும் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் திரளத் தொடங்கினர். முன்னதாக கோபாலபுரத்திலிருந்து கருணாநிதி புறப்படும்போது, அவரது வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்சிரிப்புடன் கையசைத்ததாகக் கூறி திமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஓராண்டுக்குப் பிறகு கருணாநிதி பொதுவெளிக்கு வந்திருப்பது திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருணாநிதி சென்ற பிறகு நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக தலைவர் அனைவர் முன்னிலையிலும் விரைவில் பேசுவார் என்று தெரிவித்தார்.

 

Leave a Response