பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

201710161509003868_1_amal-422._L_styvpf

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன என சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று போலீசாருக்கு பணி நியமனங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு காவல்துறை தனிப் பெருமையோடு சிறப்பாக பணியாற்றி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது.

சட்டம்ஒழுங்கைப் பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்து, தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க, தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மிகக்குறுகிய காலத்திலேயே 15,621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில், ஆயுதப்படைக்கு 6004 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13,140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 1491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15,621 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில், 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு.

இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன.

வண்டலூருக்கு அருகில் மேலக்கோட்டையூரில் வீடுகள் கட்டிக் கொடுத்தது போல, கீழக்கோட்டையூரிலும் வீடுகள் கட்டிக் கொடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல, பிற மாவட்டங்களிலும் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் துணை முதல்அமைச்சர் .பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் .கே.விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Response