ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

deepa_18102

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதற்கு தடை கோரிய வழக்கில், அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கையை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக எதிர்த்தார். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது வழக்கு மனுவில், போயஸ் தோட்ட சொத்து, சட்டப்படி தனக்கும் தன் சகோதரர் தீபக்குக்கும் சொந்தமாகிறது என்றும், எந்த நோட்டீசும் இல்லாமல் தனியார் சொத்தில் நுழைவதற்கு அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், தங்கள் அனுமதியின்றி வேதா இல்லத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபாவின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத் துறை வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Leave a Response