பொது மக்களுக்கு சேவை செய்யாமல் கழிவுநீர் வாகனங்களுக்கு துணை போகும் தமிழக அரசு?

Reddipalayam Road Incomplete Sewage Plant 2
சென்னை முகப்பேர் மேற்கு, ஜெஸ்வந்த் நகர் பகுதியில் சுமார் 1997’ம் ஆண்டு முதல் மக்கள் குடியிருக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் நான்காயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு கழிவுநீர்க் கால்வாய் வேண்டி 2006’ம் ஆண்டு, ஜஸ்வந்த் நகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு வாசிகள் சங்கத்தின் “JAMBA UNITED WELFARE ASSOCIATION” சார்பாக விண்ணப்பம் செய்துள்ளனர். 2009’ம் ஆண்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு 2011’ம் ஆண்டு சுமார் 60% பணி முடிக்கப்பட்டதாகவும், 2012’ம் ஆண்டு 20% பணி முடிக்கப்பட்டதாகவும் அங்கு குடியிருக்கும் “JAMBA” சங்கத்தின் தலைவர் சுவாமிநாதன் தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, “இந்த குடியிருப்போர் சங்கம் மூலமாக பல மனுக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, “அரசு நிர்வாகங்களிடமிருந்து சரியான பதில் இல்லாததாலும், பணிகள் முடிக்கப்படாத காரணத்தினாலும், கழிவுநீர் கால்வாய் பணிகளை முடிக்கும்படி நீதிமன்றத்தில் சுவாமிநாதன் தனி ஆளாக வழக்குகளையும் தொடர்ந்துள்ளார்” எனவும் அவர் தெரிவித்தார்.

குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலமாக ரெட்டிபாளையம் வழியாக செல்கிறது. இந்த கழிவுநீர், தேக்கம் செய்யப்பட்டு, அதை மின் குழாய் மூலம் முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் பின்புறம் பாரதி சாலையிலுள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் வரை எடுத்து செல்வதாக திட்டம். இப்படி ஒரு திட்டம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் பணிகள் சுமார் நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முகப்பேர் ஜஸ்வந்த் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது கழிவுநீர் கால்வாய் வசதி இணைக்கப்படாததால், குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர், கழிவுநீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கழிவுநீர் லாரிகள் சென்னை மாநகராட்சியோ, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியமமோ ஏற்பாடு செய்வதில்லை. தனி குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அவரவர் பணம் செலவழித்து தனியார் கழிவுநீர் லாரிகளை உபயோகித்து குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
Sewage Lorry Pumping
ஒரு லாரி லோட் கழிவுநீர் அகற்றுவதற்கு சுமார் ரூ.850 முதல் ரூ.1200 வரை தனியார் கழிவுநீர் லாரிகள் வசூல் செய்கிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று லாரி லோட் கழிவுநீர் அகற்றப்படுகிறது. ஜஸ்வந்த் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் சுமார் 20’க்கும் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சுமார் 16 முதல் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த வகையில், தினந்தோறும் லாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 40 லோட் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் தோராய கணக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40,000/= வரை கழிவுநீர் லாரிகளுக்கு இந்த குடியிருப்புகளால் செலவு செய்யப்படுகிறது.
Sewage overflowing
இங்கிருந்து லாரி மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர், எந்த ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெளியேற்றப்படாமல் மதுரவாயல் – அம்பத்தூர் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருக்கும் மழைநீர்க் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது! சில நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சரிவர கழிவுநீர் அகற்றப்படாததால், அந்த கழிவுநீர் குடியிருப்புகளில் இருக்கும் தற்காலிக கழிவுநீர் தொட்டிகளிலிருந்து வழிந்து குடியிருப்புகளுக்கு வெளியிலும், சாலைகளிலும் ஆறாக வழிகிறது. இந்த இரு காரணங்களினாலும் மலேரியா, டெங்கு, டைபாய்ட் போன்ற கொடிய நோய்கள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது.
Sewage overflowing Students suffer
சரி, இந்த கழிவுநீர் கால்வாய்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்ட காரணம் என்னவென்று விசாரிக்கையில், அப்போது இருந்த அம்பத்தூர் நகராட்சி, இன்றைய சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மற்றும் அரசு அலுவலர்கள் இந்த கழிவுநீர் லாரிகளுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் அவர்களுக்கு துணையாக இந்த கழிவுநீர் கால்வாய் பணிகளை தேக்கத்தில் போட்டுள்ளதாக அங்கு வசிக்கும் பெயர் சொல்ல விரும்பாத நபர்கள் தெரிவிக்கின்றனர். நாம் இதை பற்றி ஆய்வு செய்கையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு மாதம்தோறும் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்களால் ஒரு குறிப்பிட்ட தொகை சன்மானமாக வழங்கப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. அப்படி இல்லையென்றால் ஏன் இந்த கழிவுநீர் பணி எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் சுமார் நான்கு வருட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரியவில்லை.

சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த கழிவுநீர் கால்வாய் மற்றும், கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் பணிகளை விரைவில் முடித்து தாங்கள் நேர்மையானவர்கள் என நிரூபிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response