புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது !- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கேளிக்கை வரியாக அறிவிக்கப்பட்டிருந்த 30%  விதிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் கேளிக்கை வரியை 30 சதத்திலிருந்து 10 சதவீதமாக  குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதோடு புதிய தமிழ் படங்களுக்கு 10% வரியும், மற்ற மொழி படங்களுக்கு 20% வரியும் நிர்ணயிக்கப்பட்டு செப்டம்பர் 27ம் தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே தமிழ் திரைப்படங்களுக்கு 7% , மற்ற மொழி படங்களுக்கு 14% வரி விதிக்கப்பட்டிருந்தது.
மிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம்  கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 27-ம் தேதி அன்று தமிழக அரசு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தவும், கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்யவும் வலியுறுத்தி, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது என்றும் அறிவித்துள்ளது.

201707022243542148_vishal-two._L_styvpf

 

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரஸி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜி.எஸ்.டி., என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசால் கடந்த மாதம் 27-ம் தேதி அன்று தமிழ்ப் படங்களுக்கு அறிவித்த 10 சதவிகிதம் கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம்  மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களை மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ்ப் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 6-ம் முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தீபாவளி முதல் மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூட முடிவு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த கேளிக்கை வரியை திரும்பப் பெறும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாத புரம்,விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response