35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்தது முல்லை அணையின் நீர்மட்டம்!

29dam5

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்க கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இந்நிலையில், தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல்நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

30mulla02

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இத்தீர்மானம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. இதில், பேசிய பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Response