கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது வருமான வரித் துறையினர் முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வியாழக்கிழமை 13 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 8 இடங்களிலும், சனிக்கிழமை 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தங்கம், வைர நகைகள் ஏராளமாக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில் இன்று 4-ஆவது நாளாக செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.