நேற்று ராஜினாமா; இன்று உண்ணாவிரதம் சபரிமாலா டீச்சரின் அதிரடி!

sabari
நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா ஜெயகாந்தன் செக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார்.

அனிதாவின் தற்கொலை கல்வி எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வர வலியுறுத்தியும் விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை சபரிமாலா வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நேற்று முன் தினம் பள்ளி வளாகத்தில் தன்னுடைய 7 வயது மகனுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காலை 9 மணி முதல் அவர் தன்னந்தனியாக போராடி வந்த நிலையில் அரசு ஊழியர் அரசை எதிர்த்து போராடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தனது ஆசிரியைப் பணியை அவர் நேற்று ராஜினாமா செய்தார்.

தன்னுடைய சமூக கோபத்தை வெளிப்படுத்த தடையாக இருக்கும் அரசுப் பணி தனக்குத் தேவையில்லை இல்லை தேசம் தான் முக்கியம் என்று சபரிமாலா கூறியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்தும் ஒரே கல்வி முறையை வலியுறுத்தியும், சபரிமாலா செக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
sabarimala
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் சமூக நீதிக்காக போராடி வரும் சபரிமாலா ஆசிரியையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

நியாயமான விஷயத்திற்காக போராடும் சபரிமாலாவிற்கு உறுதுணையாக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் சபரிமாலாவின் முடிவை ஆதரித்து வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response