நீட் தேர்வு…லயோலா மாணவர்களின் போராட்டம்; இயக்குநர் வெற்றிமாறன் வேண்டுகோள்!

Anitha-3
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மறைவுக்கு திரையுலகினர் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் பேட்டிகள், அறிக்கைகள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், மாணவர்களின் கருத்தை அரசுகள் கேட்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் போராட்டத்தில் நடிகை ரோஹிணியும் கலந்துகொண்டார் அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கவேண்டும். எனவே நீட் தேர்வை எதிர்க்கிறேன். மாணவர்களின் போராட்டங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன் என்றார் நடிகை ரோகினி.

Leave a Response