
வருகிற 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கட்சியை பலப்படுத்துவதற்காக மத்திய மந்திரிகள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
மத்திய மந்திரி சபையை மாற்றி அமைப்பது தொடர் பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரதமர் மோடியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் பின் மத்திய மந்திரிகளுடன் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திரநாத் பாண்டே, சஞ்சீவ்குமார் பல்யாண் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து மத்திய மந்திரி உமாபாரதியும் ராஜினாமா செய்தார். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
புதிய மந்திரி சபை அடங்கிய பட்டியல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை மறுதினம் காலை 10 மணிக்கு மந்திரி சபை மாற்றம், விரிவாக்கம் குறித்தான அறிவிப்பு ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் பதவியேற்றுக்கொள்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


