‘‘முதலில் நீங்கள் திருந்துங்கள்!’’ -ரஜினி, அஜித் மீது பாய்ந்த சினிமா விநியோகஸ்தர்

WhatsApp Image 2017-08-26 at 7.35.17 AM

‘விவேகம்’ படத்துக்கான டிக்கெட் ரூ.800லிருந்து 1500 வரை விற்கப்பட்டதாக தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் புகார்கள் எழுந்தன.

மிஸ்டர் கிளீன் என தன்னை சொல்லிக் கொள்கிற அஜித் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் பிரபல சினிமா விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணி விவேகம் டிக்கெட் விலை விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்!

WhatsApp Image 2017-08-26 at 7.35.16 AM

அதில்,

பொதுமக்கள் யாருமே இந்த விலை கொடுத்து படம் பார்ப்பதில்லை. ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள் ‘பாகுபலி’ படத்துக்கு மக்கள் கூட்டம் வரக்காரணம் நியாயமான டிக்கெட் விலை மட்டுமே. இந்த விற்பனைக்கு தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் என அனைவருமே தான் காரணம். தமிழக அரசும் சரியாக டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து முறையாக அறிவிக்க வேண்டும்.

சிஸ்டம் சரியில்லை, நாட்டைத் திருத்த வேண்டும் என்று பெரிய நடிகர்கள் சொல்லி வருகிறார்கள். முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். முன்னணி நடிகர்கள் அனைவரும் ‘என்னுடைய படத்துக்கு 100 ரூபாய் கட்டணத்தைத் தாண்டி டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டியதானே. அப்படி விற்பனை செய்தால் என்னுடைய ரசிகர்கள் போய் ரகளை செய்வார்கள்’ என சொல்லலாமே.

எனது திரையரங்கில் 100 ரூபாய் டிக்கெட் + ஜிஎஸ்டி வரி +சிஜிஎஸ்டி சேர்த்து 118 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன். 4 திரையரங்கிலும் மொத்தம் 80 காட்சிகள் ‘விவேகம்’ திரையிட்டு இருக்கிறேன். அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்பனை பிரமாதமாக இருக்கிறது. இந்த சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் பேச வேண்டும்.

திரையரங்குகளுக்கு மக்கள் வர வேண்டுமானால் டிக்கெட் விலை முதலில் நியாயமாக இருக்க வேண்டும். 100 ரூபாய் அல்லது 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் மட்டுமே மக்கள் வருவார்கள். தயாரிப்பாளர் சங்கமும் எந்த நடிகரின் படம் வெளியானாலும், 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கக்கூடாது என்று ஏன் சொல்வதில்லை?. 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்று வருகிறார்களே, இப்போது எங்கே போனது தயாரிப்பாளர் சங்கம். ஏன் அந்த நடிகரை கண்டால் பயமா? பெரிய நடிகர்களை கண்டால் தயாரிப்பாளர் சங்கம் பயப்படுகிறதா?

பெரிய நடிகர்களுக்கு டிக்கெட் விலையைப் பற்றி கவலையில்லை. ஏனென்றால் அந்த விலைக்கு விற்றால் மட்டுமே இவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியும். திரையரங்க உரிமையாளர்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் என்னவெல்லாமோ பேசி வரும் தயாரிப்பாளர் சங்கம், இப்பிரச்சினைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றது.

ஒவ்வொரு திரையரங்க உரிமையாளரிடம் முன்பணம் என்ற பெயரில் ரூ.40 லட்சம் வரை கேட்கிறீர்கள். அவ்வளவு முன்பணம் வாங்கினீர்கள் என்றால், இவ்வளவு டிக்கெட் விலை விற்காமல் என்ன செய்வார்கள்? சின்ன படங்களுக்கு திரையரங்குகள் தர மறுக்கிறீர்கள் என்று பேசுபவர்கள், பெரிய படங்கள் வெளியாகும் போது மட்டும் ஏன் எதுவுமே பேச மறுக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் முதலில் பெரிய நடிகர்களை அடக்க வேண்டும். அதை செய்வதை விடுத்து, அந்த நடிகர்கள் ரூ.50 கோடி, ரூ.70 கோடி கேட்டாலும் வரிசையில் நின்று கொடுத்துவிட்டு, நீங்கள் விநியோகஸ்தர்களை காலி செய்து, விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களை காலி செய்கிறார்கள். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அநியாய விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று பேசுகிறார்கள். தற்போது பிரச்சினை எங்கிருந்து தொடங்குகிறது என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

ட்விட்டரில் ஆட்சி சரியில்லை என்று பேசும் நடிகர்கள், இப்பிரச்சினை தொடர்பாக பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். இது அக்கிரமக் கொள்ளை என்று போட வேண்டியதானே. நம்ம பிரச்சினையை எல்லாம் கண்டு கொள்வதை விடுத்து, ஆட்சியாளர்களை குறைச்சொல்ல தொடங்கிவிட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முன்னணி நடிகராவது குரல் கொடுக்கத் தயாரா?

எந்தவொரு படமாக இருந்தாலும் இவ்வளவு விலை தான் டிக்கெட் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

Leave a Response