மீண்டும் பிக் பாஸா அய்யய்யோ வேண்டவே வேண்டாம்! ஓவியா

oviya1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் பேச்சு மற்றும் செயல்பாடுகளால் மக்களிடையே அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. அவருக்கு மனதளவில் ஓய்வு தேவைப்படுகிறது என்றும், சில நாட்கள் கழித்துப் பேசுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

தற்போது கொச்சியில் ஓய்வு எடுத்துவரும் ஓவியா, தன்னைப் பற்றி நிலவும் கேள்விகள் அனைத்தும் வீடியோ வடிவில் பேசியுள்ளார். அவருடைய அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில் ஓவியா பேசியிருப்பதாவது:

இவ்வளவு பேருடைய ஆதரவும், வரவேற்பும் இருக்கிறது என்பதை தற்போது தான் உணர்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் நன்றி.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலி மற்றும் ஷக்தி வெளியே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய நிலையை யோசித்துப் பார்க்கும் போது வலிக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் 14 பேர் இருந்தார்கள், அவர்களில் சிலர் என்னை ஒதுக்கி வைத்தார்கள். அதற்கே எனக்கு எப்படி வலித்தது என்று தெரியும். அதனால் எனக்கு மனதளவில் அமைதி குலைந்தது. அவர்கள் வெளியே வந்தவுடன் பலரும் அவர்களைத் திட்டுவது நல்ல விஷயமே கிடையாது. தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். அந்த சாபம் எனக்கு வேண்டாம். அது எனக்கு மிகவும் வலிக்கிறது.

இங்கு அனைவருமே தவறு செய்கிறார்கள். என்னையும் சேர்த்தே சொல்கிறேன், இந்த உலகில் யாருமே நல்லவர்கள் அல்ல. தப்பு செய்தால் தான் மனிதர்கள். தப்பு செய்யவில்லை என்றால் மிருகங்கள். மிருகங்களுக்கு மனதில்லை என்பதால் தவறு செய்ய வராது. மனிதர்களுக்குத் தான் மனதிருக்கிறது, மனசாட்சி இருக்கிறது.

இங்கு கொலை செய்தவர்கள் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை எல்லாம் அரசாங்கமே மன்னித்து விடுகிறது. ஆகையால், எனக்கு நடந்தது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. தயவு செய்து அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் அன்பு, அரவணைப்பு அனைத்துமே எனக்கு புரிகிறது. மற்றவர்களை தொந்தரவு செய்து எனக்கு காட்டும் அன்பு தேவையே இல்லை. அப்படிப்பட்ட ரசிகர்களும் எனக்குத் தேவையில்லை

கண்டிப்பாக ஒரு போட்டியாளராக இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகமாட்டேன். ஆனால் நிறைய படங்கள் செய்யவுள்ளேன். அதில் நீங்கள் என்னைக் காணலாம். எனக்காக மட்டுமே படத்தைப் பார்க்காதீர்கள், படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும் பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் என்ன திட்டினாலும் கவலையில்லை.

அதே போன்று எனக்கு மனதளவில் எந்தவொரு பாதிப்புமில்லை. கொஞ்ச நாள் ரிலாக்ஸாக ஊர் சுற்றுலாம் என இருப்பதால், எனக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. உண்மையான காதல் என்றைக்குமே தோற்பதில்லை. நீங்கள் என்னை பைத்தியம் என்று நினைத்தாலும், உண்மையான காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தக் காதல் இன்னும் இருக்கிறது. என்னை நம்பாவிட்டாலும், காதலை மட்டும் நம்புங்கள். ஒருவரைக் காதலித்துவிட்டு சில நாட்கள் கழித்து வெறுக்க வேண்டும் என்றால் என்னால் முடியாது. நான் தொடர்ச்சியாக காதலித்துக் கொண்டு தான் இருப்பேன். எனது காதல் உண்மையானது.

இவ்வளவு பேர் என் மீது அன்பு காட்டுவார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. முடி வெட்டுவது குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கேன்சர் நிறுவனம் ஒன்று நோயாளிகளுக்காக முடியைக் கொடுக்க முடியுமா எனக் கேட்டார்கள். எனது அம்மா ஒரு கேன்சார் நோயாளி என்பதால் எனக்கு அதைப்பற்றி தெரியும். ஆகையால் தான் கொஞ்சம் ஸ்டைலாக முடியை வெட்டினேன். அது தான் காரணமே தவிர வேறொன்றுமே இல்லை.

நிறைய பேர் என்னை முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள். நான் உட்பட யாருமே நல்லவர்கள் அல்ல. அனைவரிடமும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விஷயங்கள் உள்ளன. ஒருவரை முன்மாதிரியாக எடுத்தால், உங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கி சந்தோஷமாக இருங்கள். உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி

இவ்வாறு வீடியோ பதிவில் ஓவியா பேசியுள்ளார்.

Leave a Response