’நா.முத்துக்குமார் எளிய சொற்களின் காதலன்!’ -யுகபாரதி

Naa.Muthukumar1

கவிஞர் நா. முத்துகுமார் நினைவு தினம் இன்று!

கடந்தாண்டு நா. முத்துகுமார் மரண செய்தியறிந்து தனக்கும் நா. முத்துகுமாருக்குமான நட்பு குறித்து கவிஞர் யுகபாரதி கட்டுரையொன்று எழுதியிருந்தார். நா. முத்துகுமாரின் நல்ல பண்புகளை விவரித்திருந்த அந்தக் கட்டுரை இதோ…

yugabharathi_1

நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது. முத்துக்குமார் என்னை சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பை பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் எனக்குப் பெருமையாய் இருந்தது.

சக கவிஞனை பாராட்டவும் அவனை வேறு வேறு தளத்திற்கு இட்டுச்செல்லும் வெள்ளந்தி மனமும் வாய்த்தவனாக அப்போது அவனிருந்தான். ஒரு சில வெள்ளிக்கிழமை மாலைகள் அவனோடு கிறிஸ்தவக் கல்லூரியில் நிகழ்ந்துவந்த வனம் கவிதைக் கூடலில் கழிந்தன. அவன் மூலமே எனக்கு பாரதிபுத்திரனும் இயக்குநர் ராமும் அறிமுகமானார்கள். கவிதைக்கான வாய்ப்புகளை கண்டடைய துடித்த அவனுடைய அந்த காலங்களில் எத்தனையோ விவாதங்களை அவன் என்னோடு நிகழ்த்திக்கொண்டிருந்தான். இரவு பகலாக அலைந்து திரிந்து அவன் கண்டடையும் சாத்தியங்களை எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தான். கதவுகளை திறந்து திறந்து ஒரு பெரும் பயணத்திற்கு என்னைத் தயார்படுத்தினான். என்னை விட இரண்டொரு வயது மூத்தவன் என்றாலும் அவனை உரிமையோடு ஒருமையில் அழைக்க அனுமதித்தான்.அப்படி அழைப்பதையே இறுதிவரை விரும்பினான். மரணமுறுவதற்கு சில நாள்கள் முன்புவரை அவன் என்னை பாராட்டிக்கொண்டே இருந்தான். பரஸ்பர பாராட்டுகளில் எங்களுடைய இருபத்தி ஐந்து வருட அன்பு எதனாலும் அறுபடாமல் இருந்தது.

என் கவிதைகளைத் தொகுப்பாக பார்க்கும் ஆவல் என்னைவிட அதிகமாக அவனுக்கிருந்தது. அப்போது ஓர் அரசியல் வார பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த என்னை இலக்கிய வெளியை நோக்கி நகரச் சொல்லிக்கொண்டே இருந்தவன் அவந்தான். கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடு என்றதோடு நில்லாமல் என் கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்கு தஞ்சாவூருக்கு வந்து வாழ்த்தினான். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவனே மூத்த மகனாகவே இருந்துவந்தான். எந்தத் தொலைபேசி அழைப்பிலும் அம்மாவும் அப்பாவும் அவனை விசாரிக்கத் தவறியதில்லை. அவன் தந்தையும் என்னை அப்படியே கருதினார்.

ஒருவர் மீது அன்பு செலுத்தி கிறங்கடிப்பதற்கு அவனுக்குக் கவிதை மட்டுமே போதுமானதாய் இருந்தது. நெருக்கடியான தருணங்களில் நிக்கோடின் மணத்தோடு அவன் பேசிய ஆறுதல் வார்த்தைகளால்தான் இன்றுவரை நானிருக்கிறேன் என்றுகூடச் சொல்லலாம். நவீன இலக்கியவாதிகளை சந்திக்கவும் அவர்களுடைய படைப்புகளில் கரைந்துபோகவும் அவன் போல எனக்கு யாரும் கற்பிக்கவில்லை. அவன் கைகாட்டிய திசையில் இருந்துதான் கணையாழியைப் பார்த்தேன். ஆறு ஆண்டுகாலம் அங்கே நான் பணிபுரிய காரணமாகவும் உந்து சக்தியாகவும் அவனிருந்தான். எந்த சந்தர்ப்பத்திலும் அவன் சந்திப்பு சலிப்பை ஏற்படுத்தியத்தில்லை. ஒரு புது செய்தியை ஒரு புது கவிதையை அவன் எனக்குத் தந்துக்கொண்டிருந்தான். அந்த கவிதையும் செய்தியும் நம்ப முடியாத அதிர்ச்சியைக் கொண்டிருக்கும். இறுதி செய்தியிலும் அதே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டான்.

வீர நடை திரைப்படத்தில் அவன் பாடல் எழுதிய செய்தியை அறிவுமதி அண்ணனுக்குப் பிறகு அவன் பகிர்ந்துகொண்டது என்னிடம்தான். ஹக்கூ உத்திகளை திரைப்பாடலில் எழுதியிருக்கிறேன் என்று வரிகளை வாசித்துக்காட்டினான். அப்போதுவரை கூட நான் திரைப்பாடல் எழுதுவது குறித்து யோசித்திருக்கவில்லை. நீயும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தனக்குத் தெரிந்த இயக்குநர் தயாரிப்பாளர்களிடம் எல்லாம் எனக்காக என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்து பேசுவதாகவும் சிபாரிசு செய்வதாகவும் உறுதியளித்தான். ஓரிருவரை சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்தான். அந்த சமயத்தில் திரைப்பாடல் துறையில் முன்ணணி பாடலாசிரியராக இருந்துவந்த கவிஞர் வாசனைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ஒருகட்டத்தில் வாசன் மஞ்சக்காமாலையால் மரணமுற்ற செய்தியை எனக்கும் சரவணனுக்கும் (ராஜூமுருகன் சகோதரன்) வந்த சொன்னவன் அவன் தான். அதே மஞ்சக்காமாலை அதே செய்தி அவனைப்பற்றியும் வரும்மென்று அப்போது நாங்கள் நினைத்திருக்கவில்லை.

அவனுடைய பட்டாம் பூச்சி விற்பவன் கவிதை நூலுக்கு விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என்று நான் சொன்னபோது எனக்கு மட்டுமென்ன விமர்சனம்? என்னோடு சேர்த்து உன்னுடய மனப்பத்தாயம், பச்சியப்பனின் உனக்குப் பிறகான நாட்கள், ஆசுவின் ஆறாவது பூதம், மா.காளிதாசின் சந்திப்பின் கடைசி நொடியில், எல்லா நூலுக்கும் இணைத்து ஒரு விழா ஏற்பாடு செய்யோம் என்றான். அப்படித்தான் லலித் கலா அகாடமியில் ஓவிய்ர்களின் உதவியோடு அவ்விழா வெகு சிறப்பாக நடந்தேறியது. என் நூல் குறித்து கவிதாபாரதியும் அவன் நூல் குறித்து பாரதிபுத்திரனும் பேசியவை குறிப்பிட்டு சொல்லத்தக்க இலக்கிய ஆவணம். எங்கள் பார்வைகளை மடைமாற்றிய அவ்விழாவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரலானோம்.

தீவிர இலக்கிய வாசிப்பில் கறாராக இருந்த அவன் எப்போதும் யாரேனும் ஒரு நவீன படைப்பாளியின் எழுத்துக்களில் உருகிக்கொண்டே இருந்தான். வெகுஜன ஊடகங்களில் திரைப்பாடலாசிரியராக அவன் முன்னுறுத்தப் பட்டாலும் சிற்றிதழ்களில் அவன் பெயம் இடம்பெறுவதையே பெருமையாகச் சொல்லிக்கொள்வான்.
ந.பிச்சமூர்த்தியிலிருந்து கு.உமாதேவிவரை அவன் வாசிப்பில் கவனிக்கப்பட்டார்கள். நவீன இலக்கியத் தெறிப்புகளை திரைப்பாடலுக்குள் கொண்டுவரும் வேட்கை அவனுக்குள் தகித்துக்கொண்டே இருந்தது. அதற்காக பல இசையமைப்பாளர்களிடம் பல இயக்குநர்களிடம் அவன் முரண்படவும் செய்தான். ஒரு பாடலில் ஒரு வரியாவது புதிது வேணாமடா என்று என்னிடம் ஆதங்கப்படுவான். வணிக சினிமாவை அவன் புரிந்து வைத்திருந்த போதும் இலக்கிய நுகர்வு அவனைப் போராளியாகவே வைத்திருந்தது. எந்த சூழலுக்கும் எளிய சொற்களில் விரைவாக எழுதும் ஆற்றலைக் அவன் கொண்டிருந்தான். அப்பா மீதான அவன் பிரியமும் அவர் வாங்கிக்குவித்திருந்த புத்தகத்தின் மீதான பிரியமும் இறுதிவரை அவனுக்குக் குறையவே இல்லை.

மத்தியதர வர்க்கத்து இளைஞனின் எல்லா போதாமைகளையும் கவிதைக்குள் பாடலுக்குள் கொண்டுவர சிந்தித்துக்கொண்டே இருந்தான். பயணமும் தனிமையும் அவனுக்குப் வெகுவாகப் பிடித்திருந்தது. எங்கேயாவது போய்க்கொண்டே இருந்தான். ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு இடத்தில் நல்ல கவிதையை நல்ல கவிஞனை சந்திப்பதே அவனுக்கு வேலையாயிருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அவனே அதிகத் திரைப்பாடலை எழுதியவன். என்றாலும், அவன் பயணத்திற்கே முன்னுரிமைக் கொடுத்தான். யுவன் – முத்துக்குமார் கூட்டணி பெருவெற்றி பெற்றிருந்த சமயங்களில் திரைப்பாடல் படைப்பின் உச்சத்தை அவன் தொட்டுவிட்டான். அதற்குமேல் போவதற்கு ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு அழகழகான வாக்கியங்களில் அவன் கட்டி எழுப்பிய கோட்டைக்குள் என்னையும் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். வெற்றியை அவனுக்கு சுகித்தத் தெரியாது. எப்பவும் நிறைவுறாத மனம் அவனுடையது.

போதும் என்று அவன் எதையும் நிறுத்தத் தெரியாதவன். இரண்டுமுறை தேசிய விருது வாங்கினான். இரண்டு முறையும் வாழ்த்துச் சொல்ல அழைக்கையில், எப்போடா நீ தேசிய விருது வாங்குவ என்றுதான் கடிந்துகொண்டான். நீ விடமாட்ட போலிருக்கே என்று சொன்னதற்கு ஒனக்காக வேணா..இந்த வருசம் எழுதாம இருக்கட்டுமா? என்றான். அடுத்தவர்க்கு எதையும் விட்டுத்தர துணிவது அவனுடைய இயல்பு. எங்கு என் பெயரைப் பார்த்தாலும் அவனிமிடருந்து அழைப்பு வரும். சமீபத்திய விகடன் கவிதையை குறித்தும் பகிர்ந்துகொண்டான். ஃபுல் பாஃம்ல இருக்குடா…அசத்து என்றான். பெரும்பாலும் ஒலிபதிவுக் கூடங்களில்தான் எங்கள் சந்திப்புகள் நிகழ்ந்துவந்தன. அவனும் நானும் இணைந்து எழுதிய பல படங்களில் அவனை நானும் என்னை அவனும் ரசித்துக்கொண்டே இருந்தோம். பாரதி..என்ன எழுதினான் என இசையமைப்பாளர்களிடம் நச்சரித்து பாடலை ஒலிக்கக் கேட்டு, கேட்டேண்டா…நல்லா எழுதியிருக்க… என்று சொல்வான்.

அவன் என்னை எங்கேயும் போட்டியாளனாக கருதவே இல்லை. அவனை போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதால் நான் ஜெயிப்பதற்கான வாய்ப்புகளை அவன் ஏற்படுத்த எண்ணினான். என்னையும் ஒரு தம்பியாகவே வரித்துக்கொண்டான். ஆதவனுக்கு ( முத்துக்குமார் மகன் ) ஊதா கலரு ரிப்பன் ரொம்ப புடிச்சிருக்குடா என்று கைபேசியைக் கொடுத்து பேச வைத்தான். வெள்ள பாதிப்புக்காக சன் டிவி, என்னையும் அவனையும் இணைந்து ஒரு பாடல் எழுதக் கேட்டபோது ஆதவனையும் அழைத்துவந்து, இவன் தான்டா உன் மாமன் என்று கட்டித்தழுவினான். திரைப்பாடல் வரலாற்றில் அவன் பெயர் அழிக்க முடியாத இடத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆழமாகவும் வேகமாகவும் அவன் எழுதும் அழகை அருகிருந்து பார்க்கையில் வாசிப்பு ஒரு படைப்பாளனை எவ்வளவு நேர்த்தியாக்கும் என அறிய முடியும். பறவைகள் மீது அவனுக்கு தீராதக் காதல். பறந்துகொண்டே இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. பழசான மிதிவண்டியில் தொடங்கி உலகத்திலுள்ள பல விமானங்களில் அவன் பறந்திருக்கிறான். ஒரு பறவைக்கு நிகரான சிறகுகள் தனக்கும் கிடைக்க வேண்டும் என அவன் விரும்பியது, இவ்வளவு சீக்கிரம் பறந்துபோகத்தான என நினைக்கையில் அழாமல் இருக்க முடியவில்லை. பட்டாம் பூச்சிகளை விற்கத் தொடங்கியவன் கடைசியில் தானுமொரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டதை விதி என்பதா? விருப்பம் என்பதா?

ஏய் முத்து..நீ செய்றது சரியில்லடா என சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆயிரத்து சொச்ச / அசைவுகளுக்குப் பின் / அடங்கிவிட்டது / பாட்டியின் பாம்படம் என்றொரு கவிதையில் எழுதியிருப்பான். பாட்டியின் பாம்படத்தைப் போலவே தன்னையும் அவன் மரணத்தில் அடங்கிக்கொண்டுவிட்டான். செய்றது சரியில்லடா என்று சொல்லிய என்னை செஞ்சது சரியில்லடா என்று சொல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டான். என்வரையில், முத்துக்குமார் தன் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை காட்டுபவனில்லை. விட்டேத்தியான மனமும் அவசரமும் அவனை ஆட்கொண்டிருந்தன. சதா சிந்தனை உளைச்சலுக்குள் அவன் சிக்குண்டிருந்தான். படைப்பு மனம் அவனை துரத்திக்கொண்டே இருந்தது.

பழசான மிதிவண்டியில் வந்து என்னையும் என் கவிதைகளையும் மரியாதை செய்த ஒருவனுக்கு மின் மயானத்தில் இறுதி மரியாதை செய்ய நேர்ந்த கொடுமையைவிட மரணம் ஒன்னும் அவ்வளவு அவலமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவனே எழுதியது போல மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு, காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை. அவன் நம்மை தூசியாக்கிவிட்டு காற்றாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்துவிட்டான். அவன் வேடிக்கை காட்டுவதற்கும் பார்ப்பதற்கும் பிரியப்பட்டவன். இப்போதுதான் புரிகிறது அவன் காட்டியதும் பார்த்ததும் வேடிக்கை இல்லையென்று.

காரியங்களில் அவன் காட்டிய அவசரம் மரணத்திலும் என்னும்போதுதான் அவனை மன்னிக்க முடியவில்லை. இதிலும் அவன் என்னை எங்களை தோற்கடித்துவிட்டான். கடல் தாண்டும் பறவைக்கு கண்டங்கள் எதுவுமில்லை என்று எழுதியவன் வேறு என்ன செய்வான்?

Leave a Response