Sattam Oru Iruttarai – War of Love – Tamil Movie Review:


சட்டம் ஒரு இருட்டறை – விமர்சனம்!

திரைப்படத்தின் பெயர்: சட்டம் ஒரு இருட்டறை

கதையின் கரு: காதலியை கொன்றவர்களை பழிவாங்கும் காதலன்.

கதை: ‘AFTER 30 YEARS” என்ற அடைமொழியோடு 30 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கும் ரீமேக் படம் தான் “சட்டம் ஒரு இருட்டறை”. இந்த முறை படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.எ.சந்திரசேகரின் பேத்தி 18 வயதே ஆன கல்லூரி மாணவி ஸ்நேகா பிரிட்டோ. படம் துவங்குவதற்கு முன்பு இவர், கமல், ரஜினி, சிரஞ்சீவி போன்றோரிடம் ஆசி பெறுவது போன்ற காட்சி ஒளிபரப்பாகிறது. படத்தின் கதை என்று பார்க்க போனால்.

மூன்று பேரை கொலை செய்ய காத்திருக்கும் ஹீரோ தமன் திட்டமிட்டு நண்பர்களின் உதவியோடு இரண்டு கொலைகளைச் செய்து முடிக்கிறார். காவல்துறைக்கு எந்த சாட்சியும் இல்லாமல் போக விபத்து என்று வழக்கை முடிக்கிறது. தமனின் அக்கா ரீமாசென் உதவி கமிஷனர். அவருக்கு மட்டும் இந்தக் கொலைகளைச் செய்தது தமன் என்று தெரிய வருகிறது. ஆனாலும் சாட்சி இல்லாமல் அவரை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார்.

எப்படியாவது சாட்சியை உருவாக்கி தமனை கைது செய்தே தீருவேன் என்று சவால் விடும் ரீமாசென் அவரை கைது செய்தாரா? எதற்காக கொலை செய்தார்? தமன் தனது இலக்கை முடித்தாரா? என்பது க்ளைமேக்ஸ்.
ஹீரோ தமனுக்கு இது இரண்டாவது படம். ஏற்கனவே ஆச்சரியங்கள் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கூடுதலாக ஆக்க்ஷன், ரொமான்ஸ், காமெடி, டான்ஸ் என எல்லாவற்றிலும் திறமை காட்டுகிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது தமனுக்கு. அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் அடுத்த நிலைக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

படத்தில் இரண்டு நாயகிகள். பிந்து மாதவி, பியா. வழக்கம் போல பியாவுக்கு என்றே செய்து வைத்த கேரக்டர். ஹாங்காங்கில் இவர் போட்டோ எடுக்கப் போகிற இடங்களில் எல்லாம் தமன் என்ட்ரி கொடுக்கிற காட்சிகள் கல கல. ஒரே வசனத்தை திரும்ப திரும்ப பேசி கொண்டே இருக்கிறார்கள். What do u think of yourself. Nothing!!

ஹீரோவுக்கு தோழியாக வருகிற பிந்து மாதவி ஹீரோவுக்கு உதவியும் செய்கிறார், ஹீரோவைக் காதலிக்கவும் செய்கிறார். அடிக்கடி “மச்சான்” என்றழைத்து நமிதாவை வேறு ஞாபகப்படுத்துகிறார்கள்.கொடுமை!!

ஹீரோவின் அக்கா, உதவி கமிஷனர் வேடத்தில் வரூகிறார் ரீமாசென். அழகான மற்றும் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி! ஈரோடு மகேஷ், ஆடம்ஸ் என ஒரு குழுவே ஹீரோவுக்கு உதவ வருகிறார்கள். ராதாரவி கொஞ்ச நேரம் வந்தாலும், அவரின் நடிப்பை கொட்டி விட்டு கலகலப்பாக்கி விட்டு செல்கிறார்.

எல்லாம் இருந்தும் இவர்களின் கேரக்டர்கள் மட்டும் கடைசி வரை நம் மனதில் நிற்க மறுக்கிறது. படத்திலிருந்து விலகியே பயணிக்கிறது திரைக்கதை. நிறைய இடங்களில் கவனசிதறல். என்றாலும் முதல்பட இயக்குனர் என்பதால் சற்று பொறுத்து கொள்ளலாம். முதல் பாதியில் கொஞ்சம் போராகவே செல்லும் படம், இரண்டாவது பாதியில் நேராகிறது.

வழக்கமாக எல்லா படங்களிலும் இசையை பெரிய அளவில் பேச வைக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் பின்னணி இசையில் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை. ஹாங்காங்கில் கூட படம் பிடித்துள்ளோம் என்பதை காட்டவும், ஹாங்காங்கின் அழகை காட்டவும் ஆசைபடும் ஒளிப்பதிவாளரின் முயற்சி திரும்ப திரும்ப வரும் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் படத்தில் நன்கு தெரிகிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் எஸ்.எ.சந்திரசேகர் பேசும் வசனங்கள் அவரின் எல்லா படங்களிலும் வரும் என்றாலும் ரசிக்க வைக்கிறது.

என்ன இருந்தாலும் முதல் படத்தை சொந்த கதையாக எடுத்து சொதப்பினாலும் கூட ரசிகர்கள் பொறுத்து கொள்வார்கள். But why…. மேலும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும் போது படத்தலைப்பு “சட்டம் ஒரு இருட்டறையா” அல்லது “WAR FOR LOVE” – ஆ என சில நேரங்களில் சந்தேகம் எழுவது உண்மை.