குஜராத்தில் மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்: 3 வேட்பாளர்களின் வெற்றி உறுதி: பாஜக

ahamtha
குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்ததால், அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்குப் போட்டியிடுகிறார். அதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானியும் போட்டியிடுகிறார்.

குஜராத் அரசியலில் காங்கிரஸ் கட்சியில் பெரும் சிக்கல்கள் வெடித்தன. ஜனாதிபதி தேர்தலில் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால் அந்தக் கட்சியின் பலம் குறைந்தது. மேலும், பல உறுப்பினர்கள் கட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீதம் இருக்கும் உறுப்பினர்கள், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

இத்தனை பரபரப்புகளுக்கும் இடையில், தற்போது குஜராத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் வெற்றிபெறும் அளவுக்கு அங்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதனால் அமித் ஷா மற்றும் ஸ்மிர்தி இரானி வெற்றி பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. மூன்றாவது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புட்டுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிபெற, காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் உறுப்பினர்கள் அணிமாறி வாக்களித்தால், பா.ஜ.க-வின் மூன்று உறுப்பினர்களும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று மாலை முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response