அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?

high-court5667-14-1465904295
சென்னை ஐகோர்ட்டில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ–மெயில் மற்றும் வீட்டு முகவரிகள் திடீரென கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி முதல் நீக்கப்பட்டுள்ளன.

அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு கொள்ளவும் முக்கிய தகவல்களமாக உள்ள அரசு இணையதளத்தில் எவ்வித காரணமுமின்றி அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ–மெயில் மற்றும் முகவரிகளை நீக்கியிருப்பது சட்டவிரோதமானது.

இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் வெளிப்படை தன்மைக்கும் எதிராக உள்ளது. எனவே, அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர்களின் தொலைபேசி எண், இ–மெயில் உள்ளிட்ட விவரங்களை எந்த அடிப்படையில் மனுதாரர் கேட்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த விவரங்களை எல்லாம் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், இ–மெயில் உள்ளிட்டவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீக்கப்பட்டதா? அல்லது அரசுக்கு தெரிந்து தான் நீக்கப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கவேண்டும்’ என்று அரசு பிளீடருக்கு உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 21–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Response