அதிமுக அணிகள் இணைந்தால் ஓபிஎஸ்க்கு என்ன பொறுப்பு? முதல்வர் ஆலோசனை!

ops muthlvai

அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலாளர் தினகரன், வரும் 4-ம் தேதி முதல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பின் மூத்த அமைச்சர்களுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் கே.பழனிசாமி, முக்கிய அரசு அலுவல்களை முடித்த பின் அமைச்சர்கள், வைத்திலிங்கம் எம்பி., ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

தினகரனை கட்சிக்குள் நுழையவிடாமல் தடுப்பது, ஓபிஎஸ் அணியுடன் இணைந்து இரட்டை இலையை கைப்பற்றுவது ஆகியவை தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் மீண்டும் இணைந்தால், அவருக்கு என்ன பொறுப்பை வழங்குவது, அவர்களை அதற்கு எப்படி ஒப்புக்கொள்ள வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பிலும், இதே போல் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் இரு அணிகள் இணைப்பில் அதிக முனைப்பு காட்டி வருகிறார். அங்குள்ள சிலர் ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர். இதற்கிடையில் பாஜக தரப்பிலும், இரு அணிகள் இணைந்தால், கூட்டணி தொடர்பாக பேசலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response