விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

vijabaskare

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர், ஏப்ரல் 11-ம் தேதி திருவேங்கைவாசலில் உள்ள கல் குவாரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை மத்திய பொதுப்பணித் துறை அலுவலர்கள் மதிப்பீடு செய்தனர். அதன்பிறகு, வருமான வரித் துறை துணை இயக்குநர் கார்த்திக் மாணிக்கம் தலைமையில் வருமான வரித் துறை அலுவலர்கள் 10 பேர், இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டுக்கு மே 17-ம் தேதி வந்தனர்.

ஏற்கெனவே ஆய்வு மேற் கொண்டபோது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்து சீல் வைத்திருந்தனர். அந்த ஆவணங்களை மீண்டும் எடுத்து சரிபார்த்தனர். பின்னர், மாலையில் மேட்டுச் சாலையில் உள்ள அவர்களது கல்வி நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இந்தச் சோதனையின்போது அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, அவ்வப்போது சம்மன் மூலம் வருமானவரித் துறை அலுவலகங்களில் ஆஜராகி அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் விளக்கம் அளித்து வந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னத்தம்பி உள்ளிட்டோரின் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருக்கு வருமான வரித் துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தினர் கூறும் போது, ‘‘வருமானவரித் துறை அலுவலர்களின் விசாரணையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகளை முடக்கி வைக்குமாறு ஜூலை 28 ம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து மாவட்டப் பதிவாளர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸ் குறித்து மாவட்டப் பதிவாளர் சசிகலா, வருவாய்த் துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். மேலும், கடந்த சில நாட்களாகவே வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்தும் தொலைபேசி மூலம் தகவல் பரி மாறிக்கொள்ளப்பட்டது’’ என்றனர்.

திருவேங்கைவாசலில் உள்ள குவாரி நேற்று இரவு வரை செயல்பட்டது. அமைச்சர் தரப்பினரின் சொத்துகளை யாரிடமும் மாற்றம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதா அல்லது குவாரிகளை இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடாதா என்பன உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இதற்கிடையே, மாவட்டப் பதிவாளர் சசிகலாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுதொடர்பாக அவர் பதிலளிக்க விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று அந்தத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், அதை திசை திருப்புவதற்காக மத்திய அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என அதிமுகவினர் கூறுகின்றனர்.

Leave a Response