தன்னம்பிக்கை சேதி சொல்லும் ‘கூட்டத்துல ஒருத்தன்.’ சினிமா விமர்சனம்

koo
படிப்பிலும் துணிச்சலிலும் இன்னபிற விஷயங்களிலும் ஆவரேஜில் இருக்கிற மாணவனுக்கு, எல்லா விஷயத்திலும் நம்பர் ஒன்னாக இருக்கிற மாணவி மீது காதல் வந்தால் என்னவாகும்?

இந்த ஒற்றை கேள்வியை எடுத்துக் கொண்டு விதவிதமான பதில்களை யோசித்து அதையெல்லாம் காட்சியாக்கி கடைசியில் ’கூட்டத்துல இருக்குற யார் வேணாலும் முயற்சி பண்ணா கூட்டத்தையே திரும்பிப் பார்க்க வைக்கலாம்’ என தன்னம்பிக்கை சேதி சொல்லி எண்ட் கார்டு போடுகிறார் இயக்குநர் த.செ. ஞானவேல்.
மற்றுமொரு பத்திரிகையாளர் டூ சினிமா இயக்குநர் … வாழ்த்துகள்!

‘எனக்கு மட்டும் ஏண்டா இப்படி நடக்குது?’ என புலம்பித் தவித்து, தாழ்வு மனப்பான்மையில் உழல்கிற கேரக்டர் அசோக் செல்வனுக்கு.
மனசுக்குப் பிடித்தவளை கவர்வதற்காக, சூழ்நிலைக் கைதியாகி தகிடுதத்தங்கள் செய்யும்போதும் சரி , விஷயம் காதலிக்கு தெரியவரும்போது சரி மனதுக்குள் அழுவதை அலட்டலில்லாத பெர்ஃபாமென்ஸில் அழுத்தமாய் காட்டிப் போகிறார்!

முந்தைய படங்களைவிட லேசாக பூசினாற்போலிருக்கும் பிரியா ஆனந்த், அசோக்செல்வனின் காதலை ஆரம்பத்தில் ஏற்க மறுத்து படிப்படியாக காதலுக்குள் விழுவது நவீனகவிதை போல் கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

கொஞ்சநேரமே வந்தாலும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது!

’தப்பு செய்றதுக்கு திறமையை ஏண்டா பயன்படுத்துறீங்க?’ -த.செ. ஞானவேலின் வசனங்கள் அங்கங்கே உயிர்ப்புடன் உலாவுகிறது.

அசோக்செல்வனின் நண்பனாக வருகிறார் பாலசரவணன். இவர் சிரிப்பு சிப்ஸ் வீச படு சீரியஸான கதையில் அவ்வளவாய் இடமில்லை.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் ’இன்னும் என்னசொல்ல’ பாட்டு தாலாட்டு!

மாணவர்களின் தன்னம்பிக்கையை தூண்டும் விதமான கருத்தை பதிவு செய்யும் படத்தை தயாரிக்க முன்வந்ததற்காக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர். பிரபு இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்!

Leave a Response