இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார் ராம்நாத் கோவிந்த்!

raamnath
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் 14_வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்!
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உற்சாகமாக நடைபெற்ற விழாவில் ராம்நாத் கோவிந்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில், பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, துணைக் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்!
ராம்நாத் கோவிந்த் பற்றிய சில குறிப்புகள்…
*கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெறுகிறார்!
*உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945_ம் வருடம் அக்டோபர் 1_ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த்.
*கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று டெல்லி உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் 16 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
*அதையடுத்து 1977_ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதுவே அவரது அரசியல் பயணத்தின் துவக்கம்!
*பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டுதோல்வி அடைந்தார். இருந்தாலும் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாக உத்தர பிரதேசத்திலிருந்து 1994_ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2006 வரை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்தார்!
*பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவர், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் போன்ற முக்கியமான பதவிகளில் இருந்த ராம்நாத் கோவிந்த் 2002_ம் வருடம் அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
*மோடி பிரதமரானபின் 2015 ஆகஸ்ட் மாதம் பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது இந்தியாவின் மிக உயரிய பதவியில் அமர்ந்துள்ளார்!
*ராம்நாத் கோவிந்தின் மனைவியின் பெயர் சவிதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Leave a Response