தமிழ் சினிமாவை படுத்தும் சென்ஸார்!

tharamani
தமிழ் ராக்கர்ஸ், திருட்டு டிவிடி, தழிழ் ஜிஎஸ்டி வரி, தமிழக அரசின் கேளிக்கை வரி என தமிழ் சினிமாவுக்கு அடுக்கடுக்காய் சோதனை மேல் சோதனை!

இந்த சோதனையெல்லாம் போதாதென்று சென்ஸாரும் அதன் பங்குக்கு தழிழ் சினிமாவை ஒரு வழி செய்வதாக குமுறல் எழுந்துள்ளது.

கடந்த வாரம் ‘தரமணி’ படத்துக்கு ஏ’ சான்றிதழ் வழங்கியது சென்ஸார். பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகல் இருந்ததாலேயே தரமணி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்.

கொதித்துப் போன படத்தின் இயக்குநர் ராம் படத்தின் விளம்பரத்தில் ‘‘ஆண்கள் மது அருந்தினால் யூ/ஏ. பெண்கள் மது அருந்தினால் ஏ சான்றிதழ்’’ என்ற வாசகத்தினை சேர்த்திருந்தார்.

சென்ஸார் போர்டை கடுமையாக தாக்கியிருந்த இந்த விளம்பரம் பரபரப்பாக பேசப்பட்டபோதும், பலரின் கவனத்துக்கு உள்ளானபோதும் சென்ஸாரில் இருந்து மூச்சுப் பேச்சு இல்லை. ஒருவரும் ஒருவரி கருத்தைக்கூட தெரிவிக்கவில்லை. சென்ஸார் அதிகாரிகள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பதில் இருந்து அவர்கள் செய்தது தவறு என உணர்ந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது!

‘‘இது விஷயமாக சினிமா பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘என்ன அநியாயம் பாருங்க. சீனுக்கு சீன் வன்முறை, டாஸ்மாக், குடி, குத்துப் பாட்டுனு இருக்குற எத்தனையோ படங்களுக்கு யூ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. எந்தெந்த படங்கள்னு பெரிய லிஸ்டே போடலாம். அவ்வளவு ஏன்… ‘வேதாளம்’ படத்துல இல்லாத வன்முறையா? அந்தப் படத்துக்கு இதே சென்ஸார்தானே யூ சர்டிபிகேட் கொடுத்துச்சு!

இயக்குநர் ராம் ஆபாசப் படம் எடுக்குறவரோ, சமூகத்தைக் கெடுக்குறதுக்காக படம் எடுக்குறவரோ இல்லை. பெண்கள் மது அருந்தற மாதிரி சீன் அவர் படத்துல இருந்துச்சுன்னா அது மூலமா ஏதோவொரு சமூக அக்கறை கருத்தைச் சொல்லப் போறார்னுதான் அர்த்தம்.

அதை புரிஞ்சுக்காம ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. இவங்களையெல்லாம் என்ன செய்றது’’ என காரசாரமாக தன் கருத்துகளைச் சொன்னார்.

இந்த நேரத்தில், ‘இனிமேல் மது அருந்தும் காட்சி உள்ள அனைத்து படங்களுக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்படும்’ என்று மத்திய திரைப்பட தணிக்கை அமைப்பின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

‘‘ஒரு கோணத்தில் இது நல்ல விஷயமாக தோன்றினாலும் மதுவின் தீமையை எடுத்துச் சொல்ல நினைக்கும் ஒரு இயக்குநர் தன் படத்தில் மது அருந்துவது போல் காட்சி வைக்கத்தான் வேண்டும்.
இந்த அறிவிப்பினால் வீண் குழப்பங்கள்தான் ஏற்படும்’’ என திரைத் துறையிலிருந்து குரல்கள் எழத் தொடங்கியுள்ளது!

தமிழ்நாட்டின் தலையெழுத்து எந்த விஷயமாக இருந்தாலும் போராட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் சென்ஸாருக்கு எதிராகவும் தமிழ் சினிமாவிலிருந்து போராட்டம் வெடித்தாலும் போலிருக்கிறது.

அதற்கு இடம் கொடுக்காமல் சென்ஸார் அதிகாரிகள் அடாவடி நடைமுறை தவிர்த்து நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சினிமாத்துறையினரின் எதிர்பார்ப்பு!

Leave a Response