தமிழ் பாடப் புத்தக அட்டைகள் எச்சில் பிளேட்டுகளாக !

peppar
தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதில், மாநில எல்லையிலும், மைனாரிட்டி சமுகத்தினர் அதிகம் உள்ள பகுதியிலும் உருது, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி புத்தகங்கள் உள்பட அனைத்து பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படக் கூடிய இலவச பாடப் புத்தகங்களில், அரசு முத்திரையுடன் கூடிய அட்டைகள், ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி ஹோட்டல்களில் பேப்பர் பிளேட்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மாணவர்களுக்காக அச்சிடப்படும் புத்தக அட்டைகள், பேப்பர் பிளேட்டுகளாக விஜயவாடாவிற்கு கொண்டு வரப்பட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் உள்ள பல ஹோட்டல்களில், தமிழக பாட புத்தக அட்டைகளுடன் கூடிய பேப்பர் பிளேட்டுகளில்தான் உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் மொழி பாடப் புத்தக அட்டைகளை, எச்சில் பிளேட்டுகளாக பார்ப்பது, தங்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக, அங்கு வசிக்கும் தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களுக்கு, பேப்பர் பிளேட்டுகள் அனைத்தும் விஜயவாடாவில் இருந்து வருவதாகக் கூறும், பேப்பர் பிளேட் விற்பனைக் கடை உரிமையாளர்கள், அவற்றை தங்களிடம் இருந்து ஹோட்டல் உரிமையாளர்கள் வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர்.

தற்போது, தமிழக அரசு பள்ளி பாட புத்தகங்களின் அட்டைகளும் பேப்பர் பிளேட்டுகளாக இருப்பதாக கூறும் கடை உரிமையாளர்கள், தங்களுக்கு அதில் உள்ள வார்த்தைகள் தெரியாது என, தங்கள் தரப்பு நியாயத்தை கூறுகின்றனர். இருப்பினும், தமிழக அரசின் இலவச பாடப் புத்தக அட்டைகள், அண்டை மாநிலமாக ஆந்திராவில், பேப்பர் பிளேட்டுகளாக விற்கப்படுவது, தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கடும் அதிர்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Leave a Response