உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், ஹைதராபாத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொள்கின்றன.
இதில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு மந்தீப் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், சித்தார்த் கவுல், மனன் வோரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தேர்வில் தேர்ச்சி பெறாததால் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவரும் யுவராஜ் சிங், இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். 2003, 2007, 2011 ஆகிய உலக கோப்பைகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது.
அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி, அரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யுவராஜ் ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இந்திய அணியில் இடம்பெறவில்லை.
யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, அவரது உடற்தகுதி மீது விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து தனது உடற்தகுதி குறித்த விமர்சனங்களையும் சந்தேகங்களையும் முன்வைத்தவர்களுக்குத் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார் யுவராஜ் சிங்.
இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து, இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு போட்டி போடும் வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங்கும் இடம்பெற முனைவார் என்பதில் ஐயமில்லை.