பரபர விறுவிறு திரைக்கதையால் ஹிட்டடித்த விக்ரம் வேதா! சினிமா விமர்சனம்

veda
பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதை மல்ட்டி ஸ்டார்’ படங்கள் என்று சொல்வார்கள்.

அந்தவகையில் ‘தோழா’ படத்துக்குப் பிறகு தமிழில் வரக்கூடிய ‘மல்ட்டி ஸ்டார்’ படம் விக்ரம் வேதா!

16 கொலைகள் செய்த வடசென்னை தாதா வேதாவை (விஜய் சேதுபதி) 18 என்கவுன்டர் செய்த போலீஸ் அதிகாரி விக்ரம் (மாதவன்) தேடித் துரத்திப் பிடிக்கும் ‘அன்டர்கவர் ஆபரேஷன்’ அதகளம்தான் கதை.

உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் காலங்காலமாய் வரக்கூடிய ‘கேங்க்ஸ்டர்’ கதைதான்.

இருந்தாலும், நாம் சின்ன வயதில் விரும்பிப் படித்த ‘விக்ரமாதித்யன் _ வேதாளம்’ கதை ஸ்டைலில் வித்தியாச விஷுவல் டிரீட்டாய் படத்தை தந்து திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர் _ காயத்ரி.

‘நம்ம அமுல்பேபி மேடியா இது?’ என ஆச்சரியப்படும்படி ‘இறுதிச் சுற்று’ படத்தில் எகிறி அடித்திருந்த மாதவன் இந்தப் படத்தின் நடிப்பில் இன்னொரு பரிமாணத்துக்கு தாவியிருக்கிறார். என்கவுண்டர் போலீஸ் அதிகாரிக்கேயுரிய கம்பீரத்தை தோற்றத்திலும் உடல்மொழியிலும் கொண்டு வந்ததாகட்டும் தன் மனைவி ஷ்ரதாவுடன் உருகி வழிவதாகட்டும் மாதவன் தன் பெர்ஃபாமென்ஸில் ஆச்சரியத்தின் உச்சத்துக்கு நம்மை கொண்டு போகிறார்!

வடசென்னை தாதாவாகவே தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி! அவருக்கே உண்டான அதிகம் அலட்டிக் கொள்ளாத அதே நடிப்புதான் என்றாலும் சின்னச் சின்ன மேனரிசங்களால் தாதா கதாபாத்திரத்துக்கு தனி மரியாதை சேர்த்திருக்கிறார்.

மாதவனிடம் விசாரணையின்போது, தான் தாதாவாக மாறிய கதையைச் சொல்கிற காட்சிகளில் அப்ளாஸால் அதிர்கிறது தியேட்டர். ‘கண்களால் சிரிக்கக்கூடிய வித்தையை இந்த மனிதர் எங்கிருந்து கற்றார்?’ என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வி.

மாதவனின் மனைவியாக ஷ்ரதா ஸ்ரீநாத், நெகுநெகு தோற்றத்தில் அழகாக இருக்கிறார். தொழில் ரீதியாக கணவனுக்கு எதிராய் மல்லுக்கட்டுவது, விழிகளில் காதலையும் காமத்தையும் கடத்துவது என நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார் இந்த பியூட்டி!

சின்ன கேரக்டரில் வந்தாலும் தெனாவட்டு முகவெட்டில் பெரிய அதிர்வு தந்து போகிறார் வரலெஷ்மி.

வசனங்கள் தரும் வைபரேஷன் பற்றி இங்கே சொல்வதாயில்லை. படம் பார்த்து உணருங்கள்!

கதிர், பிரேம், விவேக் பிரசன்னா என இன்னபிற காஸ்டிங் காம்போ பக்கா!

பரபர விறுவிறு திரைக்கதையோட்டத்துக்கு தீ’யூற்றியதுபோல் ஆர்.ஆரில் ஆக்ஷன் அதிரடி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

பாராட்ட இத்தனை இருக்கிறது சரி… குறையே இல்லையா? படத்தின் கடைசி 20 நிமிடங்கள் தருகிற சலிப்பு, லாஜிக் ஓட்டைகள் உட்பட நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஸ்கிரீன்பிளே சாகசங்கள் குறைகளையெல்லாம் ஒரங்கட்டிவிட்டு படத்தை ஹிட்டாக்கிருக்கிறது!

Leave a Response