ராக்கெட்ரி படத்தின் மூலம் கனவை நனவாக்கியிருக்கும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் சாம் CS தனது இணையற்ற புலமையால் இசையுலகில் மிக நேர்த்தியான இசையை தந்து வருகிறார். சமீபத்திய பல படங்களில் அவரது இசை பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது. அவர் தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட் மற்றும் நமது அண்டை மாநில மொழி திரைப்படங்களிலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தற்போது இவர் மாதவன் பன்மொழியில் உருவாக்கி வரும், முக்கிய படைப்பான “ராக்கெட்ரி” படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகர் மாதவன் இயக்கத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும், இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இசையமைப்பாளர் சாம் CS இசையும் இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்காக 100 பீஸ் ஆர்க்கெஸ்ட்ரா அடங்கிய இசைத் தொகுப்பை ப்ரத்யேகமாக இப்படத்தின் பின்னணி இசைக்காக உருவாக்கியுள்ளார். ‘மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா’ குழுவால் இந்த இசைத்தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS கூறியதாவது,

“மதிப்புமிக்க, மிக முக்கியமான, ஒரு பெரும்படைப்பில் வேலை செய்ய வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவாக இருந்தது. “ராக்கெட்ரி” அதை நனவாக்கியுள்ளது. இது சாதாரணமான படம் இல்லை மிகவும் உணர்பூர்வமான படைப்பு. மேலும் இது உலக தரத்தில் உருவாகும் படம் ஆகும். ஆதலால் நான் இப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை, பெரும் தரத்துடன் உருவாக்க நினைத்தேன். ‘மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா’ குழுவை, இப்படத்திற்கு பயன்படுத்த அனுமதி தந்த தயாரிப்பாளருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். “ராக்கெட்ரி” பெரும் படைப்பாக, பன்மொழியில் இந்தியா முழுதும் எதிர்பார்ப்பை உருவாக்கும் உலகத்தரமான படைப்பாக இருக்கும். இதில் உலகளவில் பணிபுரியும் புகழ் மிக்க நடிகர்கள் பங்கேற்றுள்ளார்கள். இப்படத்தின் ஒவ்வொரு இழையும் எனக்கு இசையில் பெரும் பொறுப்புணர்வை தந்திருக்கிறது. அதனை என் உயிராய் மதித்து இசையை தந்திருக்கிறேன். ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response