சேலம் முனியப்பன் கோவில் ஆடித்திருவிழாவில் எருதாட்டத்தால் இளைஞர்கள் உற்சாகம்!

eruthu
சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில், ஆடித்திருவிழாவையொட்டி, பாரம்பரிய எருதாட்டத்தில் நேற்று, 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றதால், இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். விழாவையொட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், வீரபாண்டி, சீரகாபாடி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். எருதாட்டத்தையொட்டி, பல்வேறு ஊர்களில் இருந்து, அழைத்து வரப்பட்ட, 50க்கும் மேற்பட்ட காளைகளை குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம் பூசி கோவில் மைதானத்துக்கு, மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர்.

மக்களை பார்த்து, சீறிப்பாய்ந்த காளைகளை, 18 கோர்வைக்காரர் குழுக்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காளைகளின் இருபுறமும் கட்டப்பட்டிருந்த நீண்ட கயிறுகளை பிடித்து இழுத்து, அவைகளை கட்டுப்படுத்தினர். ஆயிரக்கணக்கானோர் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர். நெய்காரப்பட்டியில், கடந்த, 2012ல் எருதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நடந்த, சாலை மறியல் கலவரம், துப்பாக்கி சூடு வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response