விஷாலும் காமராஜரும் ஒன்றா?

thupparivaalan
விஷால் தனது படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் துப்பறிவாளன்!

இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குநர் மிஷ்கின் , இணைத் தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கெரோலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகர்கள் அஜய் ரத்தினம், ஜான் விஜய், நடிகை சிம்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் இணைத் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால், ‘‘காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு நல்ல முதலமைச்சர் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அப்படியில்லை. காமராஜரைப் போன்ற ஒரு தலைவர் கிடைத்துள்ளார். காமராஜரை போலவே கல்யாணம் செய்து கொள்ளாமல் சினிமாவின் முன்னேற்றத்துகாக உழைத்துக் கொண்டிருக்கிறார்’’ என ஏகத்துக்கும் பாராட்டிப் பேசினார்.

நிகழ்ச்சியில் விஷால் பேசிய போது, “நானும் இயக்குநர் மிஷ்கினும் பல வருடமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்து நினைத்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அது ‘துப்பறிவாளன்’ படம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்தில் என் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் புதுமையான சண்டைக் காட்சிகளைப் பார்க்கலாம். தவிர, இந்த படத்தில் துப்பறியும் நிபுணராக நடித்தது வித்தியாசமான அனுபவம்!

நான் சிம்ரனின் மிகப் பெரிய ரசிகன். துப்பறிவாளனில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதும் அவரோடு நான் நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது’’ என்றவர்,
‘‘என்னை காமராஜருக்கு ஒப்பிட்டு பேசினார்கள். கொள்கையில் நிச்சயம் காமராஜரைப் போல் இருப்பேன். அதற்காக திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதில்லை. கல்யாணம் வேண்டாம் என நான் முடிவெடுத்தால் ‘லஷ்மிகரமானவங்க கோச்சுப்பாங்க இல்லையா?’’ என்று (லெஷ்மிமேனன், வரலெஷ்மி இருவரையும் சூசகமாக குறிப்பிட்டு) கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியில் விஷால் பேசியதிலிருந்து இன்னும் சில விஷயங்கள்…

*நான் திருட்டு விசிடி தாயாரிக்கும் நபர்களைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர்களைப் பற்றி இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சொல்கிறேன். அது துப்பறிவாளன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவாக இருக்கலாம்!

*திரையுலகம் கூடி நிச்சயம் புரட்சித் தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 100_வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்.

*கமல் சார் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே முன்னுதாரணம். அவருடைய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் சுதந்திரமாக கருத்துக்களைப் பதிவு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. கமல் சாருக்குஅமைச்சர்கள் தங்களுடைய எதிர் கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள். இது ஒரு வார்த்தைப் போர். கமல் சாரிடம் இது பற்றி பேசிய போது, இந்த விஷயத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிறார். இந்த விவகாரத்தில் கமல் சாருக்கு ஆதரவாக நிற்போம்.

*ரஜினி சார், கமல் சார் இருவரும் ‘அரசியலுக்கு வருகிறோம்’ என்று அறிவித்தால் அதன்பிறகு அது பற்றிய எனது கருத்துகளைச் சொல்கிறேன்.

விஷால் கைவசம் இருக்கும் படங்கள் என்னென்ன?
*‘துப்பறிவாளன்’ படத்துக்குப் பிறகு பி.எஸ்.மித்ரனின் ‘இரும்புத் திரை’, லிங்குசாமியின் ‘சண்டக்கோழி 2’, பிரபு தேவாவின் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, வெங்கடேஷின் ‘நாளை நமதே’ இது தவிர, பேரரசு இயக்கும் ஒரு படம், மலையாளத்தில் உன்னிகிருஷ்ணனின் ‘வில்லன்’ என அடுத்தடுத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
https://youtu.be/DsILgOsvgjU

Leave a Response