தடையை மீறி மண்டபம் கடற்கரை பூங்கா கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!

Kanyakumari-Beach
மண்டபம் கடற்கரைப் பூங்காவில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே கடற்கரைப் பூங்கா உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடற்கரைப் பூங்காவிற்கு வருவது வழக்கம். தற்போது மண்டபம் தென்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் திடீரென கடல் மட்டம் உயர்ந்தும், கடல் அலைகள் ஆக்ரோசத்துடனும் இருக்கிறது. இதுதவிர கடலின் தரைப்பகுதி கடினப் பாறைகளால் நிறைந்துள்ளது. இதனால் மண்டபம் கடற்கரைப் பூங்கா கடலில் குளிப்பதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்கரைப் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தடையை மீறி கடலில் குளித்து வருகின்றனர். பெரியவர்கள் கடலில் இறங்குவதால் சிறுவர்களும் பயமின்றி இறங்கிக் குளிக்கின்றனர்.

இதை அசம்பாவிதம் ஏதும் ஏற்படு முன் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், “பாறைகள் அதிகம் உள்ளதால் குளிக்கத் தடை விதித்துள்ளோம். பெரும்பாலும் இங்கு வருபவர்கள் அரியமான் கடற்கரைக்கும் செல்கின்றனர். அரியமானில் கடலில் பாறைகள் கிடையாது. அங்கு குளித்தால் ஆபத்து இல்லை. மண்டபம் பூங்காவில் குளிப்பது ஆபத்தை விளைவிக்கும். சுற்றுலாப் பயணிகள்தான் இதுபோன்ற செயல்களில் இறங்காமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Response