102 என்ற எண்ணிற்கு அழைத்தாள் கர்ப்பிணி, பிரசவித்த தாய்மார்களுக்கான பிரத்யேக வாகனம் வருமாம்…

vehicle
கடந்த மே மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் பிரசவித்த தாய்மார்கள், பச்சிளம் குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லலாம். கடந்த ஒரு மாதத்தில், இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போதுவரை இந்த வாகனத்தை மருத்துவமனை நிர்வாகம் தான் பதிவு செய்து கொடுக்கிறது.

இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அவசரம் இல்லாத மருத்துவ சேவைக்கு 102 என்ற எண்ணை தொடர்புகொண்டு வாகனத்தை பதிவு செய்யலாம். குழந்தை பிறந்து முதல் ஓர் ஆண்டிற்கு தடுப்பூசி போடவும், குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வரவும் இந்த வாகன சேவையை பெறலாம் என இத்திட்டத்தின் மேலாளர் ரூபன் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் என சுமார் 80 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தில் 8 குழந்தைகள் இருக்கைகளும், 16 பெண்களுக்கான இருக்கைகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த பெண்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் செலவு சிகிச்சைக்கு நிகராக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கிராம மற்றும் நகர பகுதிகளில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு இந்த சிறப்பு வாகன திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் பெண்கள் போக்குவரத்துக்காக ரூ.1,000 செலவு செய்வதாகவும், பொதுவாகவே 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தும் அவர்கள் பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்ல கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பலரும் கடன்பட வேண்டிய நிலை ஏற்படுவதால், ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், அவர்களின் நிதி பிரச்னையை தீர்க்கும் நோக்கிலும் இந்த இலவச தாய்-சேய் பாதுகாப்பு வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயல்படுத்திவரும் இத்திட்டத்தின்கீழ், வாகன பராமரிப்பு பணிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, தாய்மார்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response