போலிச்சாமியாரின் பேச்சை கேட்டு நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டிய மக்கள்…

nedu
தெலுங்கானா மாநிலம், ஜான்கான் மாவட்டத்தில் உள்து பெம்பாரதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த போலி சாமியார் லகான் மனோஜ், 30, தன்னை தீவிர சிவ பக்தனாக வெளிப்படுத்தினார். ‘தினமும் என் கனவில் சிவன் வருகிறார்’ என, கிராம மக்களிடம் கூறினார். கிராம மக்களும் அவரை சாமியாராக கருத தொடங்கினர்.ஒரு கட்டத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிராமத்தை ஒட்டி செல்லும் வாரங்கல் – ஐ தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போலி சாமியார் பூஜை செய்வார். இதில் கிராம மக்களும் பங்கேற்பர்.

இச்சூழ்நிலையில், கிராம மக்களிடம் போலி சாமியார் மனோஜ்,’ சிவன் கனவில் வந்தார். தனக்கு பெரிய கோவிலை கட்டும்படி கூறியுள்ளார். அதற்கான சிவலிங்கம், திங்கட்கிழமை தோறும் நான் பூஜை செய்யும் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் இருக்கிறது. அதை தோண்டி எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதை நம்பிய கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடி, ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் சாலையின் நடுவே தோண்ட தொடங்கினர். இந்த முயற்சியில் கிராம பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், போலி சாமியார் மனோஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.

Leave a Response