ஈரோடு அருகே செயல்படாத நியாயவிலை கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

நியாயவிலைகடையினை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பட்டகாரன்பாளையத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் பெற நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தங்களுக்கு அருகிலேயே நியாயவிலை கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாயவிலை கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும் இதுவரை நியாயவிலை கடை செயல்படவில்லை எனகூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கடையினை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் நியாயவிலை கடை செயல்பட நடவடிக்கை எடுக்கவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Leave a Response