இனி ஆசிரியர்களுக்கு வகுப்புகளில் செல்போன் பயன்படுத்த தடை: கல்வித் துறை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது…

teacher2
தமிழகம் முழுவதும் பள்ளிகள் வருகிற 7ம் தேதி திறப்பதை முன்னிட்டு ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்த தடை, ஆங்கில மீடியம் வகுப்புகளை ரத்து செய்யக் கூடாது என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்காக கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக நெல்லை மாவட்டத்தின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் பாளை. தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லை முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா பேசினார். அப்போது தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறியதாவது:

பள்ளிகள் திறக்கும் நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். பிளஸ்1 வகுப்புகளும் அன்றே தொடங்க வேண்டும். பள்ளி வளாகங்களில் புல், புதர்கள் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் சுத்தம் செய்ய வேண்டும். 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, பிளஸ்1 மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அருகில் உள்ள பள்ளிகளில் பட்டியல் பெற்று தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் கண்டிப்பாக தொடங்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் ஆங்கில மீடியம் வகுப்புகளை ரத்து செய்யக் கூடாது.

201718ம் கல்வி ஆண்டியற்கு 100 சதவீத தேர்ச்சியை இலக்காக கொண்டு அதற்கான பணியை இந்த மாதமே தொடங்க வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து காலை, மாலை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பிளஸ்1 மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு முறை ஒவ்வொரு பிரிவு வாரியாக பின்பற்ற வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதமே வங்கி கணக்கு தொடங்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதில் பாடவேளைகளில் பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மார்ச் 2018ல் பிளஸ்1 வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு நீட் (NEE), ஜேஇஇ (JEE) மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு பிளஸ்1 வகுப்பு அடிப்படை பாடப் பகுதியாகும்.

எனவே ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் நெல்லை ஜெயபாண்டி, சேரன்மகாதேவி ஜெயராஜ், தென்காசி (பொறுப்பு) சுடலை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அழகுராஜ், நாராயணன் மற்றும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Response