உயருமா ரயில்வே கட்டணம்…

IRCTC
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு தற்போது, சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும், 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், ஜூன், 30ம் தேதிக்கு பிறகு மீண்டும் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க அனுமதிக்கும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் என்ற ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணைய தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏ.சி., வசதி இல்லாத பெட்டிக்கான டிக்கெட்டுக்கு, 20 ரூபாய், ஏ.சி., வசதி உள்ள பெட்டிக்கான டிக்கெட்டுக்கு 40 ரூபாய் என, இதற்கு சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில், சில சலுகைகளையும் ரயில்வே அளித்து வருகிறது. அதன்படி, தானியங்கி டிக்கெட் மிஷனில் டிக்கெட் பெறுபவர்களுக்கு, 5 சதவீத கட்டண தள்ளுபடி, மாதாந்திர சீசன் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெறும் போது 0.5 சதவீத கட்டண தள்ளுபடி, ஆன் லைன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு காப்பீடு ஆகிய சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நவ., 8 ம் தேதி, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மத்திய அரசு எடுத்த போது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் டிக்கெட்டை, ஆன் லைன் மூலம் பெறுபவர்களுக்கு சர்வீஸ் சார்ஜ் ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வீஸ் சார்ஜை தான் மீண்டும் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Response