குற்றாலத்தில் தென்மேற்கு பருவக்காற்று துவங்கியது: மகிழ்ச்சியில் மக்கள்…

kutraa
ஒரு பக்கம் சென்னையில் இது வரை காணாத அளவுக்கு வெயில் இருந்தாலும் மறுப்பக்கம் சந்தோசம் தரும் செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது தமிழகம் மற்றும் கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளின் வரப்பிரசாதமாக தென்மேற்கு பருவ மழைக்காலம் உள்ளது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த பருவமழை விளங்குகிறது.

குற்றாலத்தை பொறுத்தவரை இந்த மூன்று மாதமும் சீசன் காலமாக திகழ்கிறது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னோட்டமாக சற்று பலமான காற்று சுமார் இரண்டு வாரங்கள் வீசுவது வழக்கம். இது தென்மேற்கு பருவக்காற்று என்று அழைக்கப்படுகிறது.

பருவக்காற்று துவங்கும் நாள், அதன் வேகம், தன்மை ஆகியவற்றை வைத்தே தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும், எந்த அளவிற்கு மழை பொழியும் என்று கணிக்கப்படுகிறது. தற்போது அந்தமான் பகுதியில் பருவமழைக்காலம் துவங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று குற்றாலம், தென்காசி பகுதியில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து பலமான காற்று வீசியது. பகலில் நல்ல வெயில் காணப்பட்டபோதும் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை.

தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திவரும் நிலையில் தென்காசி, குற்றாலம் பகுதியில் இதமான காற்று வீசத்துவங்கியுள்ளதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். வழக்கமாக சித்திரை மாதம் 10ம் தேதி பருவக்காற்று துவங்குவது வழக்கம்.
இதனை சித்திரை பத்து, சிறந்த பெருங்காற்று என்று கூறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவக்காற்று சற்று தாமதமாகவே வீசத் துவங்கியுள்ளது. இருந்தபோதும் வானிலை ஆய்வு மையம் அந்தமானில் பருவமழை துவங்கியதை வைத்து குறித்த காலத்தில் தமிழகத்தில் பருவமழை துவங்கும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response