கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். இந்த உரையாடலை போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள குரல்கள் இவர்கள் இருவருடையதுதான் என்பதை நிரூபிக்க, இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்துவது அவசியமாகும். எனவே, டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கொடுக்கும்படி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சிலநாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் ஆகியோரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தி முடிக்கும் வரை மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 18ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.