திறப்பு விழா – விமர்சனம்

thirappu_vizha_movie_stills_jaya_anand_manishajith_49cdfd4
சிறிய பட்ஜெட்டில், சின்ன நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கதைகளைக் கொண்ட படங்களை எடுக்க முன் வருவது பாராட்டுக்குரியது.

பெரிய பட்ஜெட்டி, பெரிய நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள் முழு கதையையும் இப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சில காட்சிகளையாவது வைக்க வேண்டும் என்று ‘திறப்பு விழா’ போன்ற படங்களைப் பார்த்து புரிந்து கொண்டால் நல்லது.

அந்த சிறிய கிராமத்தில் புதிதாகத் திறக்க உள்ள ‘டாஸ்மாக்’ கடைக்கு விற்பனையாளராக வருகிறார் ஜெய ஆனந்த். குடும்பத்தைக் கூடக் கவனிக்காமல் குடித்துத் திரிபவர்களின் குடும்பங்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்கிறார். அதே கிராமத்தில் வசிக்கும், ரஹானாவுக்கு ஜெய ஆனந்த் மீது காதல். ஆனால், இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார் ஜெய ஆனந்த்.

டாஸ்மாக் கடைக்குப் பக்கத்தில் பார் வைத்து நடத்திக் கொண்டிருப்பவருக்கும், ஜெய ஆனந்துக்கும் எப்போதும் மோதல். ஒரு நாள் போலி சரக்கைக் குடித்ததால் ரஹானாவின் அப்பா உட்பட ஊர் மக்கள் சிலர் இறந்து விடுகிறார்கள். அதனால், கைதாகும் ஜெய ஆனந்த், ஜாமீனில் மீண்டும் ஊருக்குள் வருகிறார். ஆனால், ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள்.

ஜெய ஆனந்த், தான் யார், எதற்காக அந்த ஊருக்கு வந்தார் என்பதை மக்களுக்குச் சொல்கிறார். பின்னர், ஊர் மக்களுடன் சேர்ந்து ‘டாஸ்மாக்’ கடையை மூடப் போராடுகிறார். அந்த ஊர் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

புதுமுகம் ஜெயஆனந்த், கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி இயல்பாகவே நடித்திருக்கிறார்.

மனிஷாஜித் என்ற பெயரில் சில படங்களில் நாயகியாக நடித்தவர் இந்தப் படத்தில் ரஹானா. கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நாயகனைக் கொஞ்சிப் பேசிக் காதல் செய்கிறார். அப்படிப்பட்ட பெண், டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேராட்டக் களத்தில் இறங்கி, கடைசியில் அதிர்ச்சியடைய வைக்கிறார்.

இதுபோன்ற கதையம்சத்தை மக்களுக்காக கொடத்த இயக்குனர் K.G. வீரமணி அவரகளுக்கு மிக்க நன்றி.

மொத்தத்தில் இந்த திறப்புவிழா மதுபான கடைகளுக்கான மூடும் விழா.

Leave a Response