‘நீட்’ தேர்வில் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவ- மாணவிகள் கருத்து…

neet3
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் போடப்படும்.

தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் மட்டும் மிக சிரமமாக இருந்தன. கேள்விகள் பல கால்குலேசன் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியல் பிரிவில் பிளஸ்-1 வகுப்பில் இருந்து 24 கேள்விகளும், 12-வது வகுப்பில் இருந்து 21 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன.

வேதியியல் பிரிவில் 11-வது வகுப்பில் இருந்து 21 கேள்விகளும், 12-வது வகுப்பில் இருந்து 24 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பகுதியில் 11-வது வகுப்பில் இருந்து 44 கேள்விகளும், 12-வது வகுப்பில் இருந்து 46 கேள்விகளும் இடம் பெற்றிருந்தன.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

ஹரிதா என்ற மாணவி கூறியதாவது:-

நான் தமிழக அரசின் மாநில பாட திட்டத்தில் சென்னை திருவான்மியூர் ஸ்ரீசங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். நீட் தேர்வில் தாவரவியல், விலங்கியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதில் அளிக்கும் படி இருந்தன. ஆனால் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. பல கேள்விகள் சிரமமாக இருந்தன.

நீட் தேர்வு நடத்தினால், இந்தியா முழுவதும் ஒரே பாடதிட்டமாக அறிவிக்க வேண்டும். என் போன்ற தமிழக பாடதிட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் 90 சதவீதம் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ‘நீட்’ தேர்வு கடினமாகத்தான் இருந்து இருக்கும்.

நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் நிறைய தோன்றிவிட்டன. அந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க பொருளாதார வசதி தேவை. என் போன்றவர்களால் கூட பயிற்சி மையத்திற்கு பணம் கட்ட முடியவில்லை. ஏழை மக்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? கிராமங்களில் பணவசதி இருந்தும், பயிற்சி மையங்கள் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தியா முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வந்து அதன் பிறகு நீட் நடத்த வேண்டும். எனவே வருகிற கல்வி ஆண்டில் நீட் தேர்வு வேண்டாம்.

மாணவர் சம்பத் கூறியதாவது:-

நான் தர்மபுரியை சேர்ந்தவன். அங்கு உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரியாக நடத்துவதில்லை. ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை சரியாக நடத்தினார்கள். அதில் இருந்து பல கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. அதனால் தேர்வை சரியாக எழுதி உள்ளேன். இருப்பினும் இயற்பியல் பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை. கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.

தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தன. எப்படியும் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் அந்த அளவுக்கு ‘நீட்’ தேர்வை நன்றாக எழுதி உள்ளேன்.

பிரீத்தி என்ற மாணவி கூறியதாவது:-

நான் சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தேன். நீட் தேர்வில் தாவரவியல், விலங்கியல் ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. வேதியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதிலளிக்கும் வகையில் இருந்தது. இயற்பியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரத்தினாம்பிகா, திருநெல்வேலியைச் சேர்ந்த கவுசிகா, சென்னை கொரட்டூரை சேர்ந்த மிந்தியா, பெரம்பலூரை சேர்ந்த எஸ்.ஆர்த்தி ஆகியோரும் இயற்பியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன என்றனர்.

Leave a Response