இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் : நாளை திக் விஜயம்…

meenatchi amman
மதுரை சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு திக்கு விஜயம் நடைபெறுகிறது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏழாம் திருநாளான வியாழக்கிழமை காலை கங்காளநாதர் மட்டும் மாசி வீதிகளில் அருள்பாலித்தார். திருக்கோயிலில் உள்ள மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். இரவில் நந்திகேசுவர் வாகனத்தில் சுவாமி, பிரியாவிடையும், யாழி வாகனத்தில் அம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர்.

திருக்கோயிலுக்குள் சுவாமி, அம்மன் அஷ்டசக்தி மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் புஷ்ப சிங்கார திருக்கண்ணில் இரட்டை சோஷடபசார தீபாராதனை நடைபெற்றது.

பட்டாபிஷேகம்: விழாவின் எட்டாம் நாளான இன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி, அம்மன் தெற்காவணி மூலவீதி, நேதாஜி சாலை வழியாக மேலமாசி வீதி வந்து மேலக்கோபுரத் தெருவில் உள்ள ஆதீனம் கட்டுச்செட்டி மண்டபகப்படியில் எழுந்தருள்கின்றனர். மாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலில் எழுந்தருள்வர்.

திருக்கோயில் அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் மாலை 6.55 மணி முதல் இரவு 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வெள்ளிச்சிம்மாசனத்தில் எழுந்தருள்கின்றனர்.

சனிக்கிழமை காலையில் மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் எழுந்தருள்கின்றனர். பின்னர் மாலையில் மாசி வீதிகளின் 8 இடங்களில் திக்குவிஜயம் நடைபெறுகிறது. இரவில் அம்மனுக்கு திருக்கல்யாண சீர்வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Leave a Response