கட்டாய ‘ஹெல்மெட்’ திட்டம் ரத்தாகிறது: இன்று மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…

helmet
புதுவையில் மே 1-ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுவையின் சுற்றளவு 20 கிலோ மீட்டருக்குள் உள்ளதால் கட்டாய ஹெல்மெட் திட்டம் தேவையற்றது என்றும் மேலும் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளதால் வாகனங்களில் அதி வேகமாக செல்ல முடியாது.

எனவே, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இந்த திட்டம் மத்திய அரசு திட்டம் எனக்கூறியும் விபத்தில் பலியாவதை தடுக்கவே கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கொண்டு வருவதாக அரசு விளக்கம் அளித்தது. அதோடு கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது.

மேலும் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2 நாட்களாக ஸ்பாட் பைனும் விதித்தனர். சுமார் 5 ஆயிரம் பேருக்கு இது போன்று அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்ற ஏராளமான பெண்களும் அடங்குவர். அபராத தொகையை செலுத்த முடியாத பெண்கள் போலீசாரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று மாலை ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் கட்டாய ஹெல்மெட் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். ஏற்கனவே கவர்னரின் தலையீட்டால் அரசு முடங்கி உள்ள நிலையில் கட்டாய ஹெல்மெட் திட்டம் காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்.

மேலும் வாகன பெருக்கத்தால் தினமும் நகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இந்த திட்டத்தை அமல்படுத்தினால் பொது மக்கள் மத்தியில் மேலும் காங்கிரஸ் அரசு மீது வெறுப்பு உண்டாகும். எனவே, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

இதையடுத்து முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும் போது, இன்று (புதன்கிழமை) மாலை போக்குவரத்து சீரமைப்பு குழுவை கூட்டி இது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். எனவே, கட்டாய ஹெல்மெட் திட்டம் இன்று மாலை ரத்தாகும் என கூறப்படுகிறது.

Leave a Response