மாறன் பிரதர்ஸ்க்கு எதிராக சிபிஐ மேல் முறையீடு…!

maaran
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோரை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்த நிலையில் இன்று சி.பி.ஐ தரப்பிலிருந்ததும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தொழிலதிபர் சிவசங்கரனிடம் இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாகவும், இதற்கு கைமாறாக மேக்சிஸ் நிறுவனம் சார்பில், தயாநிதிமாறன் சகோதரர் கலாநிதி மாறனின் சன்.டி.வி. குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு ஆகியவை தனித்தனியே விசாரணை நடத்தி, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, தயாநிதி மாறன் உள்ளிட்டோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சிபிஐ தரப்பிலும் மாறன் சகோதராகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனுக்களை சிபிஐ தயாரித்து வரகிறது.

Leave a Response