அகற்றப்பட்ட சசிகலாவின் பேனர்…

dg
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா படம் அச்சிடப்பட்ட பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டன. இந்த பேனர்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் சிறிய அளவிலும், சசிகலாவின் படம் பெரிய அளவிலும் அச்சிடப்பட்டிருந்தது. இது பல அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலாவின் குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்கக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பினர் நிபந்தனை விதித்தனர். மேலும் அதிமுக அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இதற்கு ஒப்புக்கொண்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினர், முதற்கட்டமாக தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கடந்த வாரம் அறிவித்தனர். இருப்பினும் கட்சியில் இருக்கும் சிலர், தினகரனுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து கொண்டிருந்ததால் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது.

இதற்கிடையே நேற்று டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் அதிமுகவில் டிடிவி தினகரனின் ஆதிக்கம் முற்றுப் பெற்றுவிட்டதாகவே கருதப்பட்டது. இதனை நல்ல வாய்ப்பாக கருதி, இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் மட்டும் இடம் பெற்றிருக்கக் கூடிய பெரிய அளவிலான ஒரு பேனர் மட்டும் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response