நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தி: பின் வாங்கிய மத்திய அரசு..!

vellor
தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்திக்கு பதிலாக ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஊர் பெயர்கள் அழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஹிந்தியில் பெயர்கள் எழுதப்பட்டன. இதனால் ஹிந்தி தெரியாத வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். ஹிந்தியை தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக நுழைக்க மத்திய அரசு செய்யும் முயற்சி இது என , தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.

எதிர்ப்பைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை,மைல் கற்களில் ஹிந்திக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலத்தில் எழுதத் துவங்கியுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச் 75 மற்றும் 77-ல் உள்ள ஒரு மைல் கற்களில் மீண்டும் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு வேலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில், ஹிந்தி பெயர்கள் அழிக்கப்பட்டு, ஆங்கில மொழி எழுதப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு கிடைக்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response