அரசியலில் இருந்து ஊழல்வாதிகளை ஒதுக்கவேண்டும்: இளங்கோவன்

ev
காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

இந்திராகாந்தி, காமராஜர் ஆகியோர் வெள்ளையனை எதிர்த்து போராடி சிறைக்கு சென்றவர்கள். அது தியாகத்தின் உச்சகட்டம். தற்போது உள்ளவர்கள் ஊழலுக்காக சிறைக்கு செல்கிறார்கள். இது கொள்ளையின் உச்சகட்டம்.புத்தர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். இப்போது உள்ளவர்களுக்கு சுடுகாட்டில் போய் தியானம் செய்தால் ஞானம் வருகிறது. தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. கொள்ளை, கொலை செய்தவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அரசியலில் இருந்து சசிகலாவின் குடும்பத்தையே வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஒருவருக்கு தொப்பி சின்னமும், மற்றொருவருக்கு இரட்டை மின் கம்பமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தொப்பி போட்டுவிடுவார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பொதுமக்கள் அ.தி.மு.க.வை முடக்கிவிட்டார்கள் என்று செய்தி வரும் என்று கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தை ஆண்ட காமராஜர் ஆட்சி தான் சிறந்த ஆட்சி என்று கூறுவார்கள். ஆனால் தற்போது லஞ்சம், ஊழல் பெருகிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊழல் செய்யப்பவர்களை மக்கள் ஆதரிக்க கூடாது. அரசியலில் இருந்து அவர்களை ஒதுக்க வேண்டும். ஊழல் வாதிகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவது காங்கிரஸ் கட்சியின் கடமை ஆகும். ரூ.50 கோடி கொடுத்து துணை வேந்தர் பதவிக்கு வருகிறார்கள். அரசியலில் இருந்து ஊழல்வாதிகளை ஒதுக்கவேண்டும் என்று இளங்கோவன் பேசி உரையாற்றினார் ….

Leave a Response