“ஒரு முகத்திரை” படத்தின் விமர்சனம்!

oru
‘துருவங்கள் பதினாறு’ பட வெற்றியைத் தொடர்ந்து ரஹ்மான் நடிப்பில் ‘பகடி ஆட்டம்’ என்றொரு படம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு முகத்திரை’ ரிலீஸாகியிருக்கிறது.

கதைக்களம்

பிரபல மனோதத்துவ டாக்டர் ரஹ்மான்! படத்தின் கதாநாயகிகள் அதிதி ஆச்சார்யா, ஸ்ருதி ஒரே கல்லூரியில் மனோநல மருத்துவம் படித்து வருகிறார்கள். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், எலியும் பூனையுமாகவும் இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகி பாண்டுவால் சமாதானம் செய்து வைக்க முடியாத இவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று ஒரு போட்டி வைக்கிறார்! அதாவது பல தடவை முயற்சி செய்தும் அந்த கல்லூரிக்கு வராத மனோநல மருத்தவரான ரஹ்மானை ஒரு குறிப்பிட்ட ஒரு தேதிக்குள் அந்த கல்லூரிக்கு அழைத்து வரவேண்டும் என்று! இந்நிலையில் அதிதி ஆச்சார்யா. தான் நேரில் பார்க்காத தனது பேஸ்புக் நண்பர் ரோஹித் மூலமாகவும், ஸ்ருதி தனக்கு வேண்டிய ஒருவர் மூலமாகவும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முயற்சிக்கிறார்கள்! இதில் யாரது முயற்சி வெற்றி பெறுகிறது? அதிதியின் ஃபேஸ்புக் நண்பரான ரோஹித் யார்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தரும் படமே ‘ஒரு முகத்திரை’

படம் பற்றிய அலசல்

ஃபேஸ்புக் மூலம் முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும், ஒரு சைக்கால்ஜி டாக்டரே சைக்கோவானால் என்ன நிகழும் எனபதையும் இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்! அதற்காக அவர் எடுத்துகொண்ட கதைக்களம் மனோநல மருத்துவமும் ஃபேஸ்புக் உறவுகளும்! படத்தின் முதல் முக்கால் மணி நேரம் நம்மை கொஞ்சம் சோதிக்கிற மாதிரி காட்சிகள் நகர்ந்தாலும், அதற்கு பிறகு படம் சூடு பிடிக்கிறது! ரோஹித் என்ற பெயரில் ரஹ்மான்தான் தன்னை ஏமாற்றி வந்தார் என்பது அதிதிக்கு தெரிய வருவதிலிருந்து படம் விறுவிறுப்படைகிறது! தன்னை ஏமாற்றிய ரஹ்மானை, அவர் பாணியிலேயே அதிதி பழிவாங்க மேற்கொள்ளும் முயற்சிகள், அதனால் ஏற்படும் போராட்டங்கள், எதிர்பாராத விதத்தில் நிகழும் கிளைமேக்ஸ் என பரபரப்பாக சென்று ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. அதிதியின் ஃபேஸ்புக் நண்பராக வரும் ரோஹித், ரஹ்மான் தான் என்பதை நம்மால் உணர முடிவதால் படத்தின் மீதான ஈர்ப்பு போய் விடுகிறது! இதை தவிர்த்திருந்தால் ‘ஒரு முகத்திரை’ இன்னும் விறுவிறுப்படைந்திருக்கும். சரவண பாண்டியனின் ஒளிப்பதிவு, பிரேம்குமார் சிவபெருமானின் இசை, எஸ்.பி.அஹமதின் படத்தொகுப்பு முதலானவை சொல்லும்படி அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

மநோதத்துவ மருத்துவராக வரும் ரஹ்மான் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் மலையாள வாடை கலந்து வரும் டப்பிங்கில் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அதிதி, ஸ்ருதி – இவர்களில் அதிதியின் பங்களிப்பும் நடிப்பும் ஸ்ருதியை விட ஒரு படி டாப்! காதலர்களாக வரும் சுரேஷ், தேவிகா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சுவாமிநாதன், சாம்ஸ், பாலாஜி, பாண்டு என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்!

பலம்

1. இரண்டாம் பாதி
2. கதைக்களம்

பலவீனம்

1. முதல் பாதி
2. எளிதில் யூகிக்கக்கூடிய சஸ்பென்ஸ் காட்சிகள்
3. டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்…

‘துருவங்கள் பதினாறு’ எனும் வெற்றிப் படத்தின் மூலம் கவனம் பெற்ற ரஹ்மான் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றாது என்றே சொல்லலாம்!

Leave a Response