அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பது அனைவராலும் எதிர்பார்த்ததுதான்;-இளங்கோவன்

ilango
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பது அனைவராலும் எதிர்பார்த்ததுதான் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் இப்போது தெரிந்தே 3 பிரிவுகளாக உள்ளனர். இன்னும் தெரியாமல் எத்தனை அணிகள் உள்ளார்களோ தெரியவில்லை. விரைவில் அதுவும் வெளிச்சத்துக்கு வரும் கட்சியும் முடங்கும்.அ.தி.மு.க. கோஷ்டிகளின் சண்டையால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. நடக்க உள்ள ஆர்.கே. நகர் தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வை மக்கள் முடக்கி விடுவார்கள்.

இப்போதுள்ள 3 அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொண்டர்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. திடீரென கட்சிக்கு துணை பொதுச்செயலாளர் ஆகி ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் தினகரன். அவர் வரலாற்று வெற்றி பெறுவார் என்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். அவர் வரலாற்று வெற்றி பெறமாட்டார் வரலாற்று தோல்வியையே பெறுவார். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சிறைக்குதான் போவார். சட்டசபைக்கு போக மாட்டார் இது உறுதி.

சசிகலாவைப்போல் தினகரனாலும் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது படத்தை அ.தி.மு.க. அரசு பயன்படுத்துவது தவறு.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி வந்தது மூலம் அங்கு சிறுபான்மையினருக்கு ஆபத்து வந்துள்ளது. மாநில முதல் மந்திரியாக யோகி பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆட்சிக்கு வந்ததும் இறைச்சி சாப்பிடக் கூடாது என்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

அன்னை சோனியா காந்திக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதால் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறுவது வரவேற்கத்தக்கது. ராகுல்காந்தி துடிப்பான தலைவர். அவர் தலைவர் பொறுப்பை ஏற்றால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் கட்சி வளரும்.தற்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்திதான் காரணம் என்று கூறுவது தவறு. அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெளிப்பாடுதான் காரணம் என்று இளங்கோவன்கூறினார்.

Leave a Response