கச்சத்தீவை மீட்போம் : தமிழக மக்களுக்கு அழைப்பு -வேல்முருகன்..

velmurugan
கச்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி, தமிழகமே ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுக்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களுக்கு தமது அழைப்பை விடுத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மீனவர்கள் கடலுக்குச் சென்றபோது இரவு 10 மணியளவில் இந்த படுகொலை நடந்துள்ளது. இத்தனைக்கும் இந்தியக் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இது நடைபெற்றுள்ளது.இலங்கை கடற்படையினர் ”வாட்டர் ஸ்கூட்டர்” என்னும் அதிவிரைவுப் படகுகளில் வந்திருக்கின்றனர். வந்தவர்கள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகூட செய்யவில்லை. துப்பாக்கியை இயக்கி சரமாரியாக குண்டுமழை பொழிந்திருப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது.

அதில் பிரிட்ஜோ என்ற 21 வயதே ஆன இளைஞர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். சரோன் என்ற இளைஞருக்கு கையில் குண்டு பாய்ந்திருக்கிறது. மேலும் மூன்று பேருக்கு உடலில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிகழ்வின்போது உடனிருந்த இதர தமிழக மீனவர்கள் கூறுகையில், இந்தியக் கடற்காவல் படையினர் தங்களது ரோந்துப் பணியில் சரிவர ஈடுபட்டிருந்தால்கூட இந்தப் படுகொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர். இலங்கை கடற்படையினரின் வெறிச்செயல் அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்போதும் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் 4 பேர் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில், உடனடியாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். இது நடக்காவிடில் அதற்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதைச் தெரிவித்துக் கொள்கிறது.இலங்கையின் இந்த வெறிச்செயலுக்கு கச்சத்தீவை மீட்காததுதான் முழு முதற்காரணம் எனக் கருதுகிறோம். ஆனால் அதற்கான நடவடிக்கை இந்தியத் தரப்பில் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. இனியும் தாமதிக்காமல் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

கச்சத்தீவை மீட்கவும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழகமே ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுக்கிறோம். அந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர் உள்பட மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்துத் கட்சி மக்களுடனும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோள் சேர்க்கும் என்ற உறுதியையும் அளிக்கிறது என்று வேல்முருகன் தமது அறிக்கையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Response